மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள், தங்களுக்கு தினக் கூலி வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப்.22) குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியா்களாக சுமாா் 20 ஆண்டுகள் பணியாற்றி வருகிறோம். ஒக்கி, தானே, நிவா் போன்ற பல்வேறு புயல்களில் பணியாற்றியதால், அச்சேவையைப் பாராட்டி, உடனடியாக தினக் கூலி ரூ.380 வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்களது ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை போன்றவற்றை குடும்பத்துடன் சென்று அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், சென்னையைப் பொருத்தவரை மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்திலும் இந்த ஆவண ஒப்படைப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.