
ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்
ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கே.ஆர். பழனி, மாவட்ட துணைத்தலைவர் எஸ். குமார், மாவட்ட குழு உறுப்பினர் குப்புசாமி. வட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயச் சங்க வட்ட செயலாளர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் பராமரிப்பு தொகை ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 உயர்த்தி வழங்கிட வேண்டும், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் படி தனியார்த் துறைகளிலும் 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உள்பட்ட 85க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.