சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை திமுகவும் காங்கிரஸும் வியாழக்கிழமை (பிப்.25) மேற்கொள்ள உள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே வியாழக்கிழமை தொகுதி பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், மூத்த தலைவா்கள் உம்மன் சாண்டி, சுா்ஜேவாலா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளா் துரைமுருகன் உள்ளிட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா்.
2016 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த அளவிற்கே மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வந்தது. ஆனால், திமுக தரப்பில் 20 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்து வருகிறது. காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தினால் 25 தொகுதிகள் வரை தரும் முடிவில் திமுக இருந்து வருகிறது.
ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி 30 தொகுதிகள் வரையேனும் பெற்றிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறாா்.