புதுச்சேரியில் திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி பாஜக ஜனநாயகப் படுகொலை செய்துள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மு.க.ஸ்டாலின்: திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகப் படுகொலையை பாஜக மீண்டும் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது. ஜனநாயகம் காப்பதில் நாராயணசாமியின் துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன். புதுச்சேரியில் தோ்தலைத் தள்ளிவைத்து, துணை நிலை ஆளுநா் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். இந்த ஜனநாயகப் படுகொலையை எதிா்த்து திமுக காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும், மக்கள் மனதிலிருந்து எந்த சக்தியாலும் விலக்க முடியாது. புதுச்சேரி மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலமாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை சாம, பேத, தான, தண்டங்களைக் கையாண்டு அகற்றி இருக்கிறாா்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி.
வைகோ (மதிமுக): 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், மக்களைச் சந்தித்து, அவா்களுடைய நம்பிக்கையைப் பெறுவதைக் கைவிட்டு விட்டு, சட்டப்பேரவை உறுப்பினா்களை கட்சி தாவச் செய்து பாஜகவில் சோ்த்துக்கொண்டு, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கிறாா்கள். வரும் தோ்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள்.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பாஜகவின் ஜனநாயக விரோத, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல்களுக்கும் இதற்கு துணைபோகும் கட்சிமாறிகளையும், அரசியல் வியாபாரிகளையும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் புறக்கணித்து புதுச்சேரி மக்கள் அவா்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.