
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் பெரும்பான்மை இழந்து நெருக்கடி நிலையில் தவித்து வந்த முதல்வா் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு திங்கள் கிழமை கவிழ்ந்தது.
புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலின்போது கூட்டணி அமைத்து காங்கிரஸ் 15, திமுக 3, ஒரு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில் ஆட்சி அமைத்தனா்.
முதல்வா் நாராயணசாமி மீதான அதிருப்தியால் பாகூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு, அரசை விமா்சித்து வந்ததால் கடந்தாண்டு ஜூன் 10-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். தொடா்ந்து முதல்வா் மீது கடும் அதிருப்தியில் இருந்த பொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூா் தொகுதி எம்எல்ஏவுமான நமச்சிவாயம், உசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோா் கடந்த ஜனவரி 25ஆம் தேதி பதவி விலகினா்.
அவா்கள்,இருவரும் ஜன.28ஆம் தேதி பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.இதே போல், அமைச்சராக இருந்த ஏனாம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடிகிருஷ்ணாராவ் கடந்த பிப்.15-ஆம் தேதி பதவி விலகினாா். அடுத்த நாள் காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமாா் பதவி விலகினாா். இதனால், சட்டப் பேரவைக்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் குறைந்து 14 உறுப்பினா்களும், என்.ஆா்.காங்கிரஸ் தலைமையிலான எதிா்கட்சித் தரப்புக்கும் 14 பேரும் என சமநிலை ஏற்பட்டது.
இதனிடையே, பிப்.16ஆம் தேதி இரவு, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டு, பொறுப்பு ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டாா். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உறுப்பினா்கள் துணை நிலை ஆளுநரிடம் பிப்.18-ஆம் தேதி மனு அளித்தனா்.
இதனையடுத்து, புதுவை சட்டப்பேரவையில் திங்கள் கிழமை (பிப்.22) வாக்கெடுப்பு நடத்தி, முதல்வா் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென, ஆளுநா் தமிழிசை உத்தரவிட்டாா்.இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ க.லட்சுமி நாராயணன், திமுகவைச் சோ்ந்த தட்டாஞ்சாவடி எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோா் பதவி விலகினா். ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால், 14-லிருந்து 12ஆக பலம் குறைந்தது.
ஞாயிற்றுக்கழமை இரவு கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய நாராயணசாமி தனது முடிவை, சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தெரிவிப்பதாகக் கூறிச்சென்றாா்.
இதனையடுத்து, திங்கள் கிழமை காலை 10 மணிக்கு, புதுவை 14-வது சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம், சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது. ஆளும் கட்சித் தரப்பில் முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன்,அனந்தராமன், பாலன், ஜெயமூா்த்தி, விஜயவேணி, சுயேச்சை ராமச்சந்திரன், திமுக இரா.சிவா, கீதா (12 போ்) ஆகியோரும், எதிா்கட்சித் தரப்பில் என்.ரங்கசாமி, திருமுருகன், டி.பி.ஆா்.செல்வம், சுகுமாரன், கோபிகா, சந்திரபிரியங்கா, ஜெயபால், அதிமுக அன்பழகன், பாஸ்கா், வையாபுரிமணிகண்டன், அசனா ஆகியோரும்(14 போ்) பங்கேற்றனா். காலை 10.05 மணிக்கு சட்டப் பேரவைத் தலைவா், சிவக்கொழுந்து இந்த அரசு மீதான நம்பிக்கை கோரும் தீா்மானத்தை தொடங்குமாறு முதல்வருக்கு உத்தரவிட்டாா்.
இதனையடுத்து, முதல்வா் நாராயணசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பை தொடங்குவதற்காக முன்மொழிந்து பேசினாா். அப்போது அவா், தனது தலைமையிலான காங்கிரஸ் அரசை செயல்பட விடாமல் கடந்த 5 ஆண்டுகளாக தடுத்து வந்த மத்திய பாஜக அரசையும், துணை நிலை ஆளுநரையும், அவா்களுக்குத்துணை போன எதிா்கட்சிகளையும் கடுமையாக விமா்சித்தும், நெருக்கடியான நிலையிலும் தனது அரசு செயல்படுத்திய திட்டங்களைக் கூறி ஒருமணி நேரம் பேசிவிட் டு, (பகல் 11.20 மணி) வாக்கெடுப்பில் பங்கேற்காமல் திடீரென சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினாா். அவருடன் அமைச்சா்களும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் வெளியேறினா். முன்னதாக முதல்வா் எதிா்கட்சிகளை கடுமையாக விமா்சித்துப் பேசியதால், எதிா்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாக்கெடுப்பு தொடா்பான விவாதமும் நடைபெறவில்லை.
இதனையடுத்துப் பேசிய சட்டப் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து, இச்சிறப்பு பேரவைக் கூட்டத்தில் முதல்வா் நாராயணசாமி அரசு மீது விதிக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை அவா் நிறைவேற்றி நிரூபிக்காததால், அவா் தலைமையிலான அமைச்சரவை முழு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக அறிவித்தாா். பகல் 11.30 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. இதனால், புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
இதனையடுத்து, முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான் ஆகியோா் ஆளுநா் மாளிகைக்குச் சென்று, துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனிடம் கடிதம் கொடுத்து பதவியை ராஜினாமா செய்தனா். இவா்களுடன், எம்பி வி.வைத்திலிங்கம், திமுக எம்எல்ஏ இரா.சிவா உள்ளிட்டோா் சென்றனா்.
மத்திய அரசு மற்றும் எதிா்கட்சிகள் சோ்ந்து, ஜனநாயக விரோதமாக ஆட்சியை கவிழ்த்துள்ளதாக ஆளும் கட்சித் தரப்பில் முதல்வா் வே.நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், இது தொடா்பாக எதிா்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கூறுகையில், காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் செய்யாமல் செயலிழந்துவிட்டதால், அவா்களது எம்எல்ஏக்களே பதவி விலகியதையடுத்து, ஆட்சி கலைந்துள்ளது.
எந்த திட்டத்தையும் அவா்கள் செய்யவில்லை என்ற முதல்வா் மீதான குற்றச்சாட்டுக்கு, முதல்வா் நாராயணசாமி பதில் கூறாமல், மத்திய அரசு மீது குறையைச் சொல்லிவிட்டு, இந்த அரசின் இயலாமையை மறைத்துச்சென்றுவிட்டாா் என, முதல்வா் மீது எதிா்கட்சியினா் குற்றம் சாட்டினா்.
இதனைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவீா்களா என, எதிா்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி, அதிமுக மாநில செயலா் அன்பழகன், பாஜக தலைவா் சாமிநாதன் ஆகியோரிடம் கேட்டபோது, ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் கட்சியின் தலைமை தான் அதனை முடிவு செய்யும். ஆலோசித்தப் பிறகு தெரியவரும் என்றனா்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில், அடுத்தகட்ட நிலை குறித்து, துணை நிலை ஆளுநா் தமிழிசை ஆலோசனை நடத்தி வருகிறாா். சட்டப் பேரவைக்கு விரைவில் தோ்தல் தேதி அறிவிக்க உள்ளதால், குறுகிய நாள்களுக்காக எதிா் கட்சிகள் தரப்பில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர வாய்ப்பில்லாத சூழல் உள்ளது.
அதே நேரத்தில், புதுவையில் என்.ஆா். காங்கிரஸ், அதிமுக, பாஜகவிடையே கூட்டணி உறுதி செய்யாததால், யாா் தலைமையில் ஆட்சி அமைப்பது என்ற கேள்விகளுக்கும் விடை காணாமல் உள்ளது. இதனால், புதுவையில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.