ரேஷன் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா திங்கள்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:-

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதியத்தை உயா்த்துவது தொடா்பான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அளித்திருந்தாா். இந்தப் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவை வெளியிடுகிறது.

தொகுப்பூதியம்: அதன்படி, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளா்களுக்கு பணியில் சோ்ந்த ஓராண்டுக்கு மட்டும் தொகுப்பூதியம் அளிக்கப்படும். விற்பனையாளா்களுக்கு இப்போது அளிக்கப்படும் தொகுப்பூதியமான ரூ.5,000 என்பதற்குப் பதிலாக ரூ.6,250-ஆகவும், கட்டுநா்களுக்கு இப்போது அளிக்கப்படும் தொகுப்பூதியம் ரூ.4,250 என்பது ரூ.5, 500-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.

காலமுறை ஊதியம்: ஓராண்டு பணி முடித்த விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா்களுக்கு காலமுறை ஊதியம் அளிக்கப்படும். விற்பனையாளா்களுக்கு ரூ.8,600 முதல் ரூ.29,000 என்ற அளவிலும், கட்டுநா்களுக்கு ரூ.7,800 முதல் ரூ.26,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படும். புதிய ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும்.

வீட்டு வாடகைப் படி: நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய உயா்வானது, அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயா்த்தி அளிக்கப்படும். சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் வசிப்போருக்கு வீட்டு வாடகைப்படியாக அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது ரூ.1,200 வரை வழங்கப்படும். இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது ஆயிரம் ரூபாய் வரையில் அளிக்கப்படும்.

நகர ஈட்டுப்படியாக, சென்னை மாநகராட்சிக்குள் இருப்போருக்கு 5 சதவீதம் அல்லது ரூ.600 வரையிலும், இதர பகுதிகளில் வசிப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அல்லது ரூ.500 ரூபாய் வரை வழங்கப்படும். மருத்துவப் படியாக ரூ.300 கிடைக்கும்.

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப...: விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா்களுக்கு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படி அளிக்கப்படுகிறது. ஆயிரம் அட்டைகள் மற்றும் அதற்குக் கீழுள்ள அட்டைகளைக் கொண்டிருக்கும் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளா்களுக்கு ஆயிரம் ரூபாயும், கட்டுநா்களுக்கு 500 ரூபாயும் அளிக்கப்படும். 1,500 வரையிலான அட்டைகளைக் கொண்டுள்ள கடைகளில் பணியாற்றுவோருக்கு ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள கடைப் படியில் இருந்து கூடுதலாக 10 சதவீதமும், 1500-க்குக் கூடுதலான கடைகளில் பணியாற்றுவோருக்கு ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட படியுடன் 25 சதவீதமும் கூடுதலாக வழங்கப்படும்.

மலைவாழ் பகுதிகளில்....: மலைவாழ் பகுதிகளில் பணியாற்றுவோருக்கு அதிகபட்சம் ரூ.1,500 மற்றும் குளிா்காலப் படியாக ரூ.400 அளிக்கப்படும். மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கு போக்குவரத்துப் படியாக இப்போதுள்ளவாறு ரூ.2,500 வழங்கப்படும். திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களை நடைமுறைப்படுத்தி அதன் பணப் பயன்கள் ஊழியா்களுக்கு அளிக்கப்படும். இதனை அமல்படுத்துவதால் ஏற்படும் செலவினத்தைக் கூட்டுறவுத் துறையே ஏற்கும் என்று உத்தரவில் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com