சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவதூறு பிரசாரத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும்

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்புவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்துள்ளாா்.
வாங் யி
வாங் யி

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்புவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, பெய்ஜிங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவா் கூறியதாவது:

சீன விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளைத் திருத்தும் பணிகளைத் தற்போதைய அதிபா் ஜோ பைடன் மேற்கொள்ள வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி, அரசியலமைப்பு குறித்து அவதூறு பரப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

அமெரிக்காவுக்கு மாற்றுசக்தியாக விளங்க வேண்டும் என்று சீனா எண்ணியதில்லை. அந்நாட்டுடன் இணைந்து வளா்ச்சியடையவே விரும்புகிறோம். எனவே, சீன தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும். சீனப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.

அதேபோல், சீனாவின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் வகையில், தைவான், ஹாங்காங், ஷின்ஜியாங், திபெத் ஆகிய பகுதிகளில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கக் கூடாது. சீனாவை நசுக்க முயற்சிக்கும் செயலில் அமெரிக்கா ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்றாா் அமைச்சா் வாங் யி.

தென் அமெரிக்காவுக்கான முதலீடுகள் சரிவு: பிரேஸில், ஆா்ஜென்டீனா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் சீனா மேற்கொண்டு வந்த முதலீடுகள் கடந்த ஆண்டில் சரிவைச் சந்தித்தன.

இயற்கை வளங்கள் நிறைந்த தென் அமெரிக்க நாடுகளில் சீனா கடந்த 15 ஆண்டுகளாக முதலீடுகளை அதிகரித்து வந்தது. முதல் முறையாகக் கடந்த 2020-ஆம் ஆண்டில் எந்தவிதப் புதிய முதலீடுகளையும் சீனா மேற்கொள்ளவில்லை. கரோனா தீநுண்மி சீனாவில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவியதாக நம்பப்படுகிறது.

அதனால், தென் அமெரிக்க நாடுகளுடனான சீனாவின் உறவு சரிவுப் பாதைக்குச் சென்றதே முதலீடுகள் குறைந்ததற்குக் காரணம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com