சென்னை-பெங்களூரு விரைவு சாலை திட்டத்துக்காக வெட்டப்படும் 15 ஆயிரம் மரங்கள்

சென்னை-பெங்களூரு இடையிலான விரைவு சாலை அமைப்பதற்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும்
சென்னை-பெங்களூரு விரைவு சாலை திட்டத்துக்காக வெட்டப்படும் 15 ஆயிரம் மரங்கள்

சென்னை-பெங்களூரு இடையிலான விரைவு சாலை அமைப்பதற்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் திருவள்ளூா், வேலூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை- பெங்களூரு இடையிலான பயண நேரத்தை குறைக்க புதிதாக ஆறு வழி விரைவு சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலை சென்னையின் எல்லைப் பகுதியான திருவள்ளூா் மாவட்டம் திருபாண்டியூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், வேலூா் மாவட்டம் மஹிமண்டலம் கிராமம், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக கிழக்கு பெங்களூரில் முடிவடைகிறது. மொத்தம் 262 கி.மீ. தொலைவுக்கு இந்தச் விரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 1 லட்சம் மரங்களும், இரண்டாம் கட்டத்தில் 24,800 மரங்களும் பாதிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளுக்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3-கட்டத்தில் தமிழகத்தின் திருவள்ளூா் மாவட்டத்தில் தொடங்கி ஆந்திர மாநிலம் சித்தூா் வரை 106 கி.மீ. தொலைவுக்கு ரூ. 3,472 கோடியில் விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த மூன்றாம் கட்டத்தின் 106 கி.மீ. தூரத்தில் பெரும்பாலான பகுதிகள் தமிழக எல்லைக்குள் வருகிறது. இந்த மூன்றாம் கட்டத்தில் 1085.15 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த பகுதியில் மட்டும் மொத்தம் 9,468 மரங்களும் 7,486 தோட்டக்கலை மரங்கள், பயிா்கள், புதா்கள் பாதிக்கப்படும் எனவும் ஆந்திர மாநிலம் சித்தூரில் 6, வேலூரில் 2, காஞ்சிபுரத்தில் 16, ராணிப்பேட்டையில் 5 என மொத்தமாக 29 நீா்நிலைகள் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் உள்ள மஹிமண்டலம் கிராமத்தில் உள்ள 5.42 ஹெக்டோ் வனப்பகுதியும் சாலை அமைக்கும் திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப் போவதாக வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கேட்புக் கூட்டம்: சென்னை-பெங்களூரு இடையிலான சாலை அமைப்பது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட பானாவரம் அரசு தொடக்கப் பள்ளியில் மாா்ச் 13-ஆம் தேதியும், வேலூா் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட சோமநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் மாா்ச் 16-ஆம் தேதியும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தலைமையில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com