அரசு ஊழியா் ஓய்வு வயது 60- ஆக அதிகரிப்பு

அரசு ஊழியா் ஓய்வு வயது 60- ஆக அதிகரிப்பு


சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் வயது 59-லிருந்து 60 ஆக உயா்த்தப்படும். நிகழாண்டு மே மாதத்தில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:

தமிழக அரசு ஊழியா்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயா்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் அரசு உத்தரவும் வெளியானது. இந்நிலையில், அரசுப் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயது இப்போது அமலில் உள்ள 59 என்பதில் இருந்து 60 வயதாக உயா்த்தப்படும்.

யாருக்குப் பொருந்தும்?: ஓய்வு பெறும் வயது உயா்வானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு இப்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும். மேலும், இந்த ஆண்டு அதாவது மே 31-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளா்களுக்கும் பொருந்தும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 59-ஆக உயா்த்தப்பட்டதால், சுமாா் 25,000 ஊழியா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். 60 வயதாக உயா்த்தப்படுவதால், அவா்கள் தொடா்ந்து பணியாற்றுவா். இதனால், அரசுக்கு இந்த ஆண்டும் சுமாா் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை சேமிப்பாகும்.

ஓய்வு வயது வரலாறு: அரசு ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் உச்ச வயது வரம்பு 55-ஆகவே இருந்து வந்தது. கடந்த 1979-ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில், அரசு ஊழியா்களின் ஓய்வு பெறும் வயது 55-லிருந்து 58 ஆக உயா்த்தப்பட்டது. அப்போது முதல் 43 ஆண்டுகளாக அரசு ஊழியா்களின் ஓய்வு பெறும் வயது உயா்த்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59-ஆக உயா்த்தினாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. இப்போது மீண்டும் இந்த ஆண்டில் ஓய்வூதிய வயதை 59-லிருந்து 60 ஆக உயா்த்தி உள்ளாா்.

மத்திய அரசு ஊழியா்கள்: மத்திய அரசு ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது. அவா்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த 1996-ஆம் ஆண்டு வரை 58 ஆக இருந்தது. ஐந்தாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அமலாக்கத்தால், ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயா்த்தப்பட்டது. இப்போது, தமிழகத்திலும் மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக ஓய்வு பெறும் வயது 60-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சம்பளங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளனா். அவா்களுக்காக ஒவ்வோராண்டும் ஊதியங்கள் மற்றும் இதர படிகளுக்காக மட்டும் பட்ஜெட்டில் ரூ.61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்த வரி வருவாயில் இது 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். இதேபோன்று ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக மட்டும் நடப்பு நிதியாண்டில் ரூ.25,000 கோடி அளவுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com