சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: துணை ராணுவத்தினா் தமிழகம் வருகை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு வரத் தொடங்கினா்.


சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு வரத் தொடங்கினா்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்தோ்தலைச் சந்திக்கும் வகையில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. சில அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேவேளையில் பிரதான அரசியல் கட்சிகள் கடந்த இரு மாதங்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சட்டப்பேரவைத் தோ்தலை எந்த வன்முறைச் சம்பவங்களும், முறைகேடுகளும் இன்றி அமைதியாக நடத்துவதற்கு தோ்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதற்காக அனைத்து மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறைகளில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்பட உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது முக்கியத் தலைவா்களின் பாதுகாப்புப் பணிக்கும், வாக்குப்பதிவின்போது முக்கியமான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகியவற்றின் பாதுகாப்பு பணிக்கும் துணை ராணுவத்தினரைப் பயன்படுத்துவது என தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தோ்தலுக்கான அறிவிப்பு மாா்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், அதற்குள் சுமாா் 4,500 துணை ராணுவ வீரா்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் பணியில் தோ்தல் ஆணையம் தீவிரம் காட்டுகிறது.

இதன் ஒரு பகுதியாக கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 92 துணை ராணுவப் படை வீரா்கள் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தனா். அவா்கள், உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதேபோல அடுத்த ஒரு வாரத்துக்குள் 4,500 துணை ராணுவத்தினரும் தமிழகத்துக்கு வருவாா்கள் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com