மாசிமகம்: மாமல்லபுரத்தில் இருளர், பழங்குடியினர் குலதெய்வ வழிபாடு

மாசி மகத்தை ஒட்டி இருளர் பழங்குடி மக்கள் தங்களது குலதெய்வமான கன்னியம்மனுக்கு விழா நடத்தி வணங்கி மகிழ்ந்தனர்.
மாசிமகம்: மாமல்லபுரத்தில் இருளர், பழங்குடியினர் குலதெய்வ வழிபாடு
மாசிமகம்: மாமல்லபுரத்தில் இருளர், பழங்குடியினர் குலதெய்வ வழிபாடு

மாசி மகத்தை ஒட்டி இருளர் பழங்குடி மக்கள் தங்களது குலதெய்வமான கன்னியம்மனுக்கு குலதெய்வ வழிபாடு செய்வதற்காக மாமல்லபுரம் கடற்கரையில் குடில் அமைத்துத் தங்கி விழா நடத்தி கன்னி அம்மனை வணங்கி மகிழ்ந்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

பழங்குடி இருளர்கள் மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு தெற்குப்பக்கம் கடற்கரையில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கில் திரள்வது வழக்கம். அவர்கள் அங்கு தங்கள் குலதெய்வமான கன்னி அம்மனை வணங்கி தங்கள் உறவு முறைகளில் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சுப சடங்குகளைச் செய்வது வழக்கம்.

மேலும் தங்கள் குலதெய்வமான கன்னி அம்மன் மாசி மாத பௌர்ணமி அன்று கடற்கரையில் அருள் பாலிப்பதாக நம்புகின்றனர். விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இருளர் மக்கள் மாசி மகத்திற்கு ஒருநாள் முன்னதாகவே மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடுகின்றனர். 

தாங்கள் கொண்டு வந்த தென்னங்கீற்று மற்றும் துணிகளால்  சிறு சிறு குடில்கள் அமைத்துத் தங்கி அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு  இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல்கள் நடத்தி மகிழ்ந்தனர்.
மறுநாள் சனிக்கிழமை காலையில் கடற்கரையில் தங்கள் குலதெய்வமான கன்னி அம்மனுக்கு மணலில் 7 படி அமைத்து தேங்காய் பூ பழம் வைத்து வழிபாடு செய்தனர். கழுத்தில் நூல் மாலை அணிந்து ஒருவித சத்தம் எழுப்பி சாமி ஆடி குறி கேட்டு வழிபாடு நடத்திக் கொண்டாடினர். காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தி குடும்பத்துடனும் உறவினர்களுடனும்  கொண்டாடினர்.

கடந்த ஆண்டு இதே மாசி மகத்தன்று நிச்சயம் செய்த ஜோடிகளுக்கு இந்த மாசி மகத்தன்று திருமணம் செய்தனர். அப்போது மணமக்கள் வேட்டி சட்டை அணிந்தும் மணமகள் கூரை புடவை அணிந்தும் காணப்பட்டனர். திருமணம் முடிந்தவுடன் உறவினர்கள் தாங்கள் பாரம்பரிய பாடல்களை பாடியும் மணமக்களை மகிழ்வித்தனர். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சிறிய சிறிய குடில்கள் அமைத்து குடில்களில் தங்கி கடற்கரையில் நடந்த இவர்களின் திருமண நிகழ்வு பார்வையாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் மெய்சிலிர்க்கவும் ரசிக்கவும் வைத்தது. 

இந்த ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட இருளர் இன ஜோடி திருமணம் செய்து கொண்டனர் .தங்கள் பாரம்பரியங்களை விட்டுக் கொடுக்காமல் ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று திரண்டு எளிமையான வழிபாடு நடத்தியும் திருமணம் செய்தும் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை நிலை நிறுத்தினர். 

குறிப்பாக பழங்குடி இருளர் பெண்கள் சாமி ஆடி குறி சொல்லினர். மாமல்லபுரம் கடற்கரையில் பழங்குடிகள் அவர்கள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வெள்ளிக்கிழமை இரவிலிருந்து திருவிழாவை நடத்தி சனிக்கிழமை காலை திருமண நிகழ்வுகள் மொட்டை அடித்தல் காது குத்தல் நிகழ்வுகளைச் சுப நிகழ்வுகளை நடத்தி  மகிழ்ச்சி அடைந்தனர். 

இவர்கள் சமைப்பதற்காகத் தேவைப்படும் அலுமினிய பாத்திரங்கள் சில்வர் பாத்திரங்கள் இரும்பு பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம், பேருந்து நிலையம் அருகில், கடற்கரைச் சாலை பகுதிகளில் கடைகள் விரிக்கப்பட்டு விற்கப்பட்டன. அந்த பொருட்களை இருளர் இன மக்கள் மட்டும் வாங்காமல் சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரம் வாசிகளும் விலைபேசி வாங்கிச் சென்றனர். பல்வேறு ஊர்களிலிருந்து வந்த வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் நடந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com