கமல் படத்துடன் 4 ஆயிரம் டி-சர்ட்: கடலூரில் பறிமுதல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், கட்சியின் சின்னம், கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 4 ஆயிரம் டி-சர்ட்களை தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
சரக்கு வாகனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டி-சர்ட்டுகளுடன் நிலை கண்காணிப்புக் குழுவினர்
சரக்கு வாகனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டி-சர்ட்டுகளுடன் நிலை கண்காணிப்புக் குழுவினர்


கடலூர்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், கட்சியின் சின்னம், கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 4 ஆயிரம் டி-சர்ட்களை தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலைக் குழு, கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, கடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்காக வட்டாட்சியர் விஜயா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நிலை கண்காணிப்புக் குழுவினர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமைக் காவலர்கள்  வில்வேந்தன்,  காவலர் சின்னராஜ் ஆகியோர் கடலூர்-புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியான பெரியகாட்டுப்பாளையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியாக கடலூருக்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது 6 மூட்டைகளில் டி-சர்ட், சில்வர் பாத்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உரிய ரசீது இல்லாத நிலையில் அவற்றைப் பரிசோதித்த போது சுமார் 4 ஆயிரம் டி-சர்ட்டுகளில் மக்கள் நீதி மய்யம் பெயர், அதன் தலைவர் கமல் படம், டார்ச் லைட் சின்னம், புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் சட்டப் பேரவைத் தொகுதி, சோமநாதன் ஆகிய பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், சுமார் ஆயிரம் பாத்திரங்கள் இருந்தன. 

சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, வாகன ஓட்டுநரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 'புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் வழியில், ஒரு வாகனம் பழுதாகி விட்டதாகவும், இப்பொருட்களை அருகிலுள்ள மற்றொரு பகுதியில் இறக்கி வைத்தால் பணம் தருவதாகவும் கூறி ஏற்றி விட்டனர். ஆனால், அவர்களின் விபரம் தெரியவில்லை' என்று ஓட்டுநர் தெரிவித்தார். 

இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com