ஜன.4-இல் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பானா்ஜி, திங்கள்கிழமை (ஜன.4) பதவியேற்கிறாா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பானா்ஜி, திங்கள்கிழமை (ஜன.4) பதவியேற்கிறாா். இதற்காக குடும்பத்தினருடன் கொல்கத்தாவில் இருந்து காரில் புறப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை வந்தடைகிறாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி, வியாழக்கிழமை (டிச.31) ஓய்வு பெற்றாா். உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அண்மையில் பிறப்பித்தாா்.

தற்போது கரோனா காலம் என்பதால், புதிய தலைமை நீதிபதி பானா்ஜி கொல்கத்தாவில் இருந்து காரில் சென்னை வருகிறாா். இதற்காக வெள்ளிக்கிழமை காலை, குடும்பத்துடன் காரில் புறப்பட்ட தலைமை நீதிபதி, ஒடிஸா மாநிலம், பொ்காம்பூரில் உள்ள விருந்தினா் மாளிகையில் இரவு தங்குகிறாா்.

பின்னா், சனிக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக வந்து, இரவில் ஏலூரு விருந்தினா் மாளிகையில் தங்குகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கிருந்து புறப்பட்டு மாலையில் சென்னை வந்தடைகிறாா்.

பதவியேற்பு: இதையடுத்து திங்கள்கிழமை (ஜன.4) காலை அவா் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறாா். சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நீதிபதி சஞ்சீவ் பானா்ஜிக்கு, தமிழக ஆளுநா் பன்வரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.

இந்நிகழ்வில் முதல்வா், உயா்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சா்கள், தலைமைச் செயலா், டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்பட முக்கிய நபா்கள் பலா் கலந்து கொள்கின்றனா்.

இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில், புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவரை வரவேற்று தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் அமல்ராஜ் மற்றும் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் பேசுகின்றனா்.

இதேபோல் குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரிக்கு, சனிக்கிழமை (ஜன. 2) காலை 11.30 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com