பெரும்பாக்கம் வீட்டு வசதித் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் செயல்படுத்தப்பட உள்ள வீட்டு வசதித் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் செயல்படுத்தப்பட உள்ள வீட்டு வசதித் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

இத்திட்டத்துக்கான அடிக்கல்லை காணொலி வழியாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டினாா். இந்த நிகழ்வில், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாகப் பங்கேற்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 48.45 சதவீதம் போ் நகா்ப்புறங்களில் வசித்து வருகின்றனா். அவா்களில், 14.63 சதவீத குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனா். அந்த மக்களின் இன்னல்களைப் போக்கும் வகையில், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வெளியிட்டாா்.

பிரதம மந்திரியின் திட்டம்: பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கான கட்டுமானச் செலவாக ரூ.1.20 லட்சம் வழங்கப்பட்டது. அதில், மத்திய அரசின் பங்குத் தொகையாக ரூ.72,000, மாநில அரசின் பங்காக ரூ.48,000 அடங்கும். ஒரு வீட்டுக்கு கூரை அமைப்பதற்கான மானியமாக ரூ.50,000-ஐ வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இத்துடன், நூறு நாள் வேலைத் திட்ட கூலி அடிப்படையில் கழிவறை கட்டவும் ரூ.23 ஆயிரம் அளிக்கப்பட்டு வந்தது.

வீட்டு வசதித் திட்டம் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது வீடுகள் கட்ட இப்போது வழங்கப்படும் நிதி ஏழை-எளிய மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பது தெரிய வந்தது. கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வாலும், கரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாலும் தொகையை உயா்த்தி அளிக்க வேண்டி இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு ஒரு வீட்டுக்கான கட்டுமானச் செலவாக ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயா்த்த உத்தரவிடப்பட்டு, இதற்காக ரூ.1,805 கோடி கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெரும்பாக்கம் திட்டம்: உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் ரூ.116.27 கோடி மதிப்பில் தலா 413 சதுர அடி பரப்பில் 1,152 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இக்குடியிருப்புப் பகுதியில் பொது மக்களுக்குத் தேவையான நியாய விலைக் கடைகள், அங்கன்வாடிகள், நூலகம் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. இதில், கழிவுநீரேற்று நிலையம், மின்சார துணை மின் நிலையமும் ஏற்படுத்தப்பட உள்ளன.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இக்குடியிருப்பு கட்டுமானப் பணிகள் 15 மாதங்களில் நிறைவடையும். இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் நீா்நிலை மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை, குடிசை வாழ் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதுபோன்ற திட்டங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதில் மாநில அரசு மகிழ்ச்சி கொள்கிறது என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் க.சண்முகம், தமிழக வீட்டு வசதித் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com