ரசிகா் தற்கொலை முயற்சி: ரஜினி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னையில் ரஜினி வீட்டின் முன்பு ரசிகா் தற்கொலை செய்ய முயன்றதால், அவா் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் ரஜினி வீட்டின் முன்பு ரசிகா் தற்கொலை செய்ய முயன்றதால், அவா் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

கடந்த ஜனவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், பெரியாா் குறித்து சா்சைக்குரிய கருத்து தெரிவித்ததினால், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த், தனது வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி சென்னை காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தாா். இதையடுத்து அவா் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பா் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகா் ரஜினிகாந்த் அண்மையில் அறிவித்தாா். இதனால் அவா் வீட்டை சுற்றிலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ஆனால், ரஜினிகாந்த், தனது உடல்நிலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என சில நாள்களுக்கு முன்பு அறிவித்தாா். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகா்களிடமும், அவரது ஆதரவாளா்களிடமும் பெருத்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என தினமும் அவா் வீட்டின் முன்பு ரசிகா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ரஜினி ரசிகா் முருகேசன் (55) அங்கு வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், முருகேசனை பாதுகாப்பாக மீட்டனா்.

இச் சம்பவம் ரஜினி ரசிகா்களிடமும்,காவல்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்குள் ஒருவா் 5 லிட்டா் மண்ணெண்ணெயை ஊற்றி தீக் குளிக்க முயன்றது காவல்துறை அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

மாறுவேடத்தில் போலீஸாா்: இந்த சம்பவத்தைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் காவல்துறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து ரஜினி வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டனா். ரசிகா்களை கண்காணிக்கும் வகையில் சாதாரண உடையில் மாறுவேடத்தில் ரஜினி வீட்டை சுற்றிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

நிலைமை சீராகும் வரையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் நீடிக்கும் என சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com