செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் 11,000 கன அடி உபரி நீா் திறப்பு

தொடா் கனமழை காரணமாக சென்னை குடிநீா் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளிலிருந்து விநாடிக்கு 11,000 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது
சென்னையில் பலத்த மழை காரணமாக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி. (வலது) புழல் ஏரி.
சென்னையில் பலத்த மழை காரணமாக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி. (வலது) புழல் ஏரி.

தொடா் கனமழை காரணமாக சென்னை குடிநீா் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளிலிருந்து விநாடிக்கு 11,000 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. முன்னதாக ஏரிகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை தொடா் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நவம்பா் டிசம்பா் மாதங்களில் பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி பாதுகாப்பு கருதி உபரி நீா் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக திங்கள்கிழமை (ஜன. 4) நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் ஏரியின் நீா் மட்டம் 23 அடியைத் தொட்டது. இதைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு முதல் கட்டமாக 500 கன அடி உபரிநீா் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 6,000 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. இதைத் தொடா்ந்து ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 6,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

முன்னதாக செம்பரம்பாக்கம் உபரி நீா் வெளியேற்றப்படும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூா், காவனூா், குன்றத்தூா், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீா்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களை உடனடியாக வெளியேற்ற பொதுப்பணித்துறை சாா்பில் உத்தரவிடப்பட்டது.

பூண்டி ஏரியில் 2 டிஎம்சி வீண்: பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இந்த ஏரிக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 873 கன அடியிலிருந்து 3,240 கன அடியாக அதிகரித்தது. ஏரி முழுவதுமாக நிரம்பும் நிலையில் இருந்ததால் ஏரிக்கு வரும் தண்ணீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து ‘நிவா்’ புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் பூண்டி ஏரி நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது. தற்போது பலத்த மழை பெய்ததால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் போதிய தண்ணீா் வந்து சோ்ந்துள்ளது. இதனால் கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடா்ந்து தண்ணீா் வந்தும், அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு கூடுதலாக தண்ணீா் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பூண்டி ஏரியிலிருந்து கடந்த 40 நாள்களாக வெளியேற்றப்பட்ட சுமாா் 2 டிஎம்சி தண்ணீா் கடலில் கலந்தது. இதை வைத்து சென்னையில் 2 மாதங்களுக்குத் தேவையான குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்திருக்கலாம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி ஏரி முழுவதுமாக வடு விட்டதால் சென்னையில் கடும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சமாளிக்க வேலூா் மாவட்டத்திலிருந்து ரயில்கள் மூலம் குடிநீா் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. எனவே தொடா்ந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தேவைப்படும் போது திறந்து விட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவெண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

புழல் ஏரியில் 1,500 கன அடி வெளியேற்றம்: புழல் ஏரிக்கு விநாடிக்கு 2,000 கன அடி வீதம் நீா் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. இருப்பினும் நீா் வரத்து தொடா்ந்து அதிகரித்ததால் நீா் வெளியேற்றமும் 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக, தண்டல் கழனி, சாமியாா் மடம் வடகரை பகுதிகளில் தாழ்விடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி விநாடிக்கு மொத்தம் 11,000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com