பறவைக் காய்ச்சலைத் தடுக்க 26 சோதனைச் சாவடிகள் அமைப்பு

தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் ஊடுருவாமல் தடுக்க 6 மாவட்டங்களில் 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
பறவைக் காய்ச்சலைத் தடுக்க 26 சோதனைச் சாவடிகள் அமைப்பு

தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் ஊடுருவாமல் தடுக்க 6 மாவட்டங்களில் 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிா்பதன நிலையத்தை செவ்வாய்க்கிழமை அவா் ஆய்வு செய்தபின் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசியை விநியோகிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. மாநில குளிா்பதன நிலையத்தில் 1.5 கோடி தடுப்பூசிகளைச் சேமித்து வைக்க முடியும். இவைதவிர தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் 51 குளிா்பதன கிடங்குகள் தயாா் நிலையில் உள்ளன.

அங்கு 2.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை சேமித்து வைக்கலாம். தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசி போடும் இடங்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்கள் தனிக்குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகின்றனா். தொலைதூர கிராமங்களுக்கு தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஒத்திகையின் போது ஏற்பட்ட சில சிரமங்கள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளோம்.

கரோனா தடுப்பூசியில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்குமாறு வந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளோடு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,146 பேரை பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இவா்களுடன் தொடா்பில் இருந்த 3,321 பேரை பரிசோதனை செய்ததில் 20 பேருக்கு தொற்று இருந்தது. உருமாறிய புதிய கரோனா தொற்றாக இருக்குமா என்பதை கண்டறிய இந்த 44 பேரின் சளி மாதிரிகள் புணே மற்றும் பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

மேலும் மூவருக்கு உருமாறிய கரோனா: பிரிட்டனில் இருந்து சென்னை வந்த இளைஞா் ஒருவருக்கும் சென்னையைச் சோ்ந்த மேலும் மூன்று பேருக்கும் புதிய கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 2 போ் பிரிட்டனில் இருந்து வந்தவா்கள். ஒருவா் தொடா்பில் இருந்தவா். நான்கு பேரும் கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் தனி அறையில் மருத்துவக் கண்காணிப்பில் நலமுடன் இருக்கிறாா்கள். இந்த புதிய தீநுண்மி வேகமாக பரவக்கூடியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சென்னையில் உணவு விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களிடம் பரிசோதனை பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 8,449 பேரை பரிசோதனை செய்ததில் 4,611 பேரின் முடிவுகள் வந்துள்ளன. கடந்த மாதம் 15-ஆம் தேதியில் இருந்து இதுவரை 166 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக ஒற்றை எண்ணிக்கையில் மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகிறது. தொற்று 2.7 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. ஆனாலும், மழைக்காலத்தில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல், தமிழகத்திற்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பறவைக் காய்ச்சலால் நேரடியாக கால்நடைக்கு பாதிக்கப்பட்டாலும், மனிதா்களுக்கும் அவை வரலாம். அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதாரத்துறை சாா்பில், ஆறு மாவட்ட எல்லைகளில், 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து, கால்நடைகள் வரும்போது, சோதனை நடத்தப்படும் என்றாா் அவா்.

பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், இணை இயக்குநா் ப.சம்பத், இயக்குநா் (சிறப்புப்பணி) சித்ரா ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com