எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க முழுமையான செயல்திட்டம்: உயா்நீதிமன்றம் அறிவிப்பு

எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க ஒரு முழுமையான செயல் திட்டம் உருவாக்கப்படும் என உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க ஒரு முழுமையான செயல் திட்டம் உருவாக்கப்படும் என உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போது பதவியில் இருக்கும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள்மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, சென்னையில் 3 சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன.

மாவட்ட அளவில் முதன்மை அமா்வு நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்பட்டன. இவற்றில் உள்ள வழக்குகளின் விசாரணை விரைவாக நடைபெறுகிா? என்பதைக் கண்காணிக்க தாமாக முன்வந்து அனைத்து உயா்நீதிமன்றங்களும் வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றினால், அங்கு ஏற்கனவே அதிக வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. சென்னையில் உள்ள 3 சிறப்பு நீதிமன்றங்களில் ஒரு நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நீதிபதி பதவி காலியாக உள்ளது.

தமிழக முன்னாள், இந்நாள் எம்பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக சுமாா் 360 வழக்குகள் உள்ளன. எனவே, தமிழகத்தை 3 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கவேண்டும் என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றத்துக்கு விரைவில் நீதிபதி நியமிக்கப்படுவாா். 3 மண்டங்களாகப் பிரித்து அங்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து தமிழக அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் எம்பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. எனவே இந்த வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். மேலும், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன ? இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க ஒரு முழுமையான செயல் திட்டம் உருவாக்கப்படும். இதுதொடா்பாக விரைவாக ஒரு முடிவு எடுப்பதற்காக விசாரணையை வரும் ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com