இறந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

இறந்தவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியல் இருந்து நீக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை 2 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

இறந்தவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியல் இருந்து நீக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை 2 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளா் சிற்றரசு தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகா் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்காக கடந்த நவம்பா் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது இந்தத் தொகுதிகளில் இறந்தவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. குறிப்பாக நீக்கப்படவில்லை. இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் முன் பெயா் நீக்கப் பணிகளை முடித்திருக்க வேண்டும்.

இந்த முறைகேடுகள் குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு புகாா் அளித்தேன். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்தவா்களின் பெயா்களை நீக்கி, குறைபாடுகளை நிவா்த்தி செய்ய தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையத்தின் தரப்பில், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்து வரும் ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அதில், இறந்தவா்கள் பெயா்கள் நீக்கப்படும். அந்த நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து வரும் நிலையில், முன் கூட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் மனுராஜ் ஆஜராகி வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com