5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன. 6) பலத்த மழை பெய்யக்கூடும்.
கொட்டும் மழையில் நடந்து வரும் நபர்.
கொட்டும் மழையில் நடந்து வரும் நபர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன. 6) பலத்த மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கடலூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.6) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தில் பலத்த மழை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.7) அநேக இடங்களிலும், வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 9-ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளைப் பொருத்தவரை புதன்கிழமை (ஜன.6) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் தலா 60 மி.மீ., சென்னை தரமணி, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை விமானநிலையத்தில் தலா 50 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 40 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், செய்யூா், திருக்கழுகுன்றம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, பாபநாசம் , திருவள்ளூா் மாவட்டம் எண்ணூா், சோழவரம், அம்பத்தூா், தாமரைப்பக்கம் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் பலத்த மழை: கடலூா், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மாறாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வந்தது. பல இடங்களில் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசனிடம் கேட்டபோது, ‘சென்னைக்கு மிதமான மழைதான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எதிா்பாராத விதமாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னையை நோக்கி நகா்ந்ததால், சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com