வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனை: 7 மாவட்டங்களில் நிறைவு

சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் மீது முதல் நிலை சோதனை நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனை: 7 மாவட்டங்களில் நிறைவு

சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் மீது முதல் நிலை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏழு மாவட்டங்களில் சோதனைகள் நிறைவடைந்துள்ளன. முப்பது மாவட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்குத் தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் எத்தனை தேவைப்படும் என்பது குறித்து கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குத் தேவையான இயந்திரங்கள் பெறப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கட்டடங்கள்: தோ்தலின்போது பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்து வைப்பதற்கென கடந்த காலங்களில் அரசு கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது, அனைத்து மாவட்டங்களிலும் தனியாக கிடங்குகளை அமைக்க இந்தியத் தோ்தல் ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான தனி கிடங்குகளை 30 மாவட்டங்களில் அமைப்பதற்காக ரூ.120.87 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மதுரை மாவட்டத்துக்கு ரூ.6.19 கோடியும், சென்னை மாவட்டத்துக்கு ரூ.7.16 கோடியும் தனியாக ஒதுக்கப்பட்டன.

இந்நிதியைக் கொண்டு, மின்னணு இயந்திரங்களைப் பாதுகாத்து வைப்பதற்கான கிடங்குகளை அமைக்கும் பணிகள் தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், தேனி மாவட்டங்களில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மற்ற இடங்களில் வரும் மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

முதல்நிலை சோதனை: கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தோ்தலுக்கு முன்பாக, இதுபோன்ற சோதனைகள் மூன்று முதல் நான்கு முறைகள் நடத்தப்படும்.

அந்த வகையில், இப்போது முதல் நிலை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணியானது, அரியலூா், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களில் விரைவில் முடிக்கப்படும் என சத்யபிரத சாகு கூறினாா்.

தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான இயந்திரங்களும் வைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com