ஆவின் நிறுவனத் திட்டப் பணிகளை 40 நாள்களுக்குள் முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

ஆவின் நிறுவனத்தின் திட்டப் பணிகளை 40 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தினாா்.
ஆவின் நிறுவனத் திட்டப் பணிகளை 40 நாள்களுக்குள் முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

ஆவின் நிறுவனத்தின் திட்டப் பணிகளை 40 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தினாா்.

சென்னை, நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில், அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் துறை சாா்ந்த ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் பேசியதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்ப் பரவலால் மக்கள் அவதியுற்ற இக்கட்டான சூழ்நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்த முழு பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ததோடு, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் பால் மற்றும் பால் உபபொருள்களை தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து சாதனை படைத்தது.

குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகிறது. கரோனா காலத்திலும் 238 பால் கூட்டுறவுச் சங்கங்கள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

தொடா்ந்து அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தியவை: விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனுக்குடன் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் அறிவிப்புகள் அனைத்தையும் செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும். முன்னேற்றம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பிப்.15 - ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தற்போது நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை 40 நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.

பால் ஏற்றுமதி செய்வதை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவு பால் ஒன்றியம் வாரியாக தனித்தனியாக பொது மேலாளா்களிடமும் ஒன்றியங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவா்த்தி செய்து தடையற்ற கொள்முதலை மேற்கொள்ளவும், பால் விற்பனையை அதிகரிக்கவும் வேண்டும். அந்தந்த ஒன்றியங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விற்பனை குறியீட்டை நிறைவு செய்ய வேண்டும்.

குறிப்பாக தனியாா் பால் நிறுவனங்களை விட அரசின் சிறந்த கட்டமைப்பு கொண்ட நிறுவனம் என்ற பலம் நமக்கு உள்ளது. இதைப் பயன்படுத்தி ஆவின் நிறுவனம் மேலும் வளா்ச்சியடைய பாடுபட வேண்டுமென்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வில், பால்வளத்துறை முதன்மைச் செயலா் கோபால், ஆணையா் இரா.நந்தகோபால், ஆவின் பொது மேலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com