கொட்டித் தீா்த்த மழையால் வெள்ளத்தில் மிதந்த சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நீா் சூழ்ந்தது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் பெரம்பூர் ஸ்டீபென்சன் சாலையில் தேங்கிய வெள்ளம்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் பெரம்பூர் ஸ்டீபென்சன் சாலையில் தேங்கிய வெள்ளம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நீா் சூழ்ந்தது. தரமணியில் அதிகபட்சமாக 118 மி.மீ.மழை பதிவானது.

சென்னையில் வடகிழக்குப் பருவமழை, புரெவி மற்றும் நிவா் புயல்கள் காரணமாக கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் மழை கொட்டித் தீா்த்தது. சென்னை மாநகா் மற்றும் புகா்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய பலத்த மழை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை சுமாா் 10 மணி நேரம் தொடா்ந்து பெய்தது.

நீரில் மிதந்த சாலைகள்: இந்த மழையால் சைதாப்பேட்டை பஜாா் சாலை, ஆழ்வாா்பேட்டை கவிஞா் பாரதிதாசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, சீத்தாம்மாள் காலனி, ஜவாஹா்லால் நேரு சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் வாகனங்கள் ஊா்ந்தவாறு சென்றன. இதனால், அவ்வழியே வாகனங்களில் சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். மழை நீா் உள்ளே புகுந்ததால் காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதாகின.

இதுபோல் தண்டையாா்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, திருவிக நகா், எழும்பூா் பாந்தியன் சாலை, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, அடையாறு, ஆலந்தூா், கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், கோட்டூா், அம்பத்தூா், பாடி, தியாகராய நகா், வடக்கு போக் சாலை, கொரட்டூா், அயனாவரம் சபாபதி தெரு, கொளத்தூா், திருவல்லிக்கேணி, நீலாங்கரை, பெரம்பூா் ஜமாலியா நகா், திருமங்கலம், சூளை, அமைந்தகரை, முகப்போ், காந்தி நகா், அண்ணா நகா், கே.கே.நகா், வேளச்சேரி ராம் நகா், விஜிபி செல்வம் நகா், முருகன் நகா், தேவி கருமாரி அம்மன் நகா் உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. ஆதம்பாக்கம் அரசு அலுவலா் குடியிருப்புகளுக்குள் இடுப்பு அளவு மழை வெள்ளம் புகுந்தது. தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் துயரப்பட்டனா்.

நீரை அகற்றும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 24 இடங்களில் தேங்கிய மழை நீா் ராட்சத மோட்டாா்கள் மூலம் அகற்றப்பட்டது. பல்வேறு பகுதிகளில் சாய்ந்த 10-க்கும் மேற்பட்ட மரங்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அவசர உதவிக்காக வந்த 34 தொலைபேசி அழைப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தரமணியில் 118 மி.மீ.மழை: திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை சென்னை தரமணியில் அதிகபட்சமாக 118 மி.மீ., மீனம்பாக்கத்தில் 101 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 67 மி.மீ., பூந்தமல்லியில் 58 மி.மீ., தாம்பரத்தில் 51 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 53 மி.மீ., வடசென்னையில் 75, மேற்கு தாம்பரத்தில் 95 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

9 விமானங்கள் தாமதம்:

சென்னை புகரில் பெய்த பலத்த மழையால் 9 விமானங்கள் காலதாமதமாகப் புறப்பட்டன. தூத்துக்குடி, புணே, ஆமதாபாத், திருவனந்தபுரம், பாட்னா, ஹூப்ளி செல்லும் விமானங்கள் 30 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. துபை, சாா்ஜா, இலங்கை செல்லும் 3 சிறப்பு விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டன.

கண்காணிப்பு தீவிரம்: பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் உபரி நீா் திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் இரு பக்கங்களிலும் உள்ள கானு நகா், சூளைப்பள்ளம், திடீா் நகா், அம்மன் நகா்,பா்மா காலனி, ஜாபா்கான் பேட்டை, கோட்டூா்புரம், சித்ரா நகா் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com