நேர்மைக்கும் - மோசடி, ஊழலுக்குமான போர் :  கமல்ஹாசன்

தற்போது நடப்பது நேர்மைக்கும் - மோசடிக்கும், நேர்மைக்கும் - ஊழலுக்குமான போர் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நேர்மைக்கும் - மோசடி, ஊழலுக்குமான போர் :  கமல்ஹாசன்
நேர்மைக்கும் - மோசடி, ஊழலுக்குமான போர் :  கமல்ஹாசன்

ஆம்பூர்:  தற்போது நடப்பது நேர்மைக்கும் - மோசடிக்கும், நேர்மைக்கும் - ஊழலுக்குமான போர் என ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் புதன்கிழமை தேர்தல் பரப்புரை மேற்கொண்டு பேசிய போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரை மேற்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு வருகை தந்த கமல்ஹாசன் மேலும் பேசியது,   தமிழகம் முக்கியமான அரசியல் திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கின்றது. இதை வழிநடத்த வேண்டியது உங்களுடைய கடமை.  அதன் கருவியாக இருக்க வேண்டியது என்னுடைய கடமை.  மக்கள் நீதிமய்யம்.  3 வயது குழந்தை.  நடக்கும் குழந்தையாக இல்லாமல், அதை ஓடும் குழந்தையாக நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள்.  இது நடக்காது, காணாமல் போய்விடும் என விமர்சகர்கள் சொல்லச் சொல்ல, மக்கள் நீதி மய்யம் கட்சியை நீங்கள் வளர்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்.  மக்கள் எழுச்சியை மாற்றமாக மக்களாகிய நீங்கள் மாற்றிக் காட்ட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.  

தற்போது நடப்பது நேர்மைக்கும் - மோசடிக்குமான போர்.  நேர்மைக்கும் - ஊழலுக்குமான போர்.  யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லையென வாழ்ந்துவிட்டு போகலாம் என்று இருக்காதீர்கள்.  ஊழலுக்கும் நேர்மையாளர்களுக்கான போர் இது.  இதில் நீங்கள் நேர்மையாளர் பக்கம் தான் நிற்க வேண்டும்.  அதனால் உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மக்கள் நீதி மய்யம் தான்.   வழக்கமாக அரசியல்வாதிகள் உங்களிடத்தில் வந்து வாக்குறுதிகளை வீசி எறிவார்கள்.  ஆனால் நான் உங்களிடம் வாக்குறுதி கேட்கிறேன்.  நேர்மையை ஆதரியுங்கள்.  இங்கு வந்திருப்பவர்கள் யாரும் பிரியாணி கொடுப்பார்கள் என எவரும் வந்து நிற்கவில்லை.  மழை, வெயிலில் நீங்கள் நிற்பது நேர்மையாக தமிழகம் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று நம்பி வந்திருக்கும் கூட்டம்.

இந்த கூட்டம் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால் முதலில் இங்கு வந்திருப்பவர்களில் ஆர்வமுள்ளவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.  மாற்றத்தை ஒருவர் மட்டும் செய்துவிட முடியாது.  நீங்கள் மாற்றத்தை செய்யுங்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.  நீங்களும் வடம் பிடித்து தேர் இழுத்தால் தான், நாளை நமதாகும்.   ஆம்பூரில் குடிநீர் சரியான தரத்தில் இல்லை.  அதற்காக தொழிலை விட்டுவிட முடியாது.  கழிவு நீரை சுத்திகரிக்கும் ஆலைகளையெல்லாம் சரியாக பராமரித்தால் குறைகள் நீங்க வாய்ப்புள்ளது.  

உடனே கூட நீங்க வாய்ப்பு உண்டு.  தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் திறந்தவெளி சாக்கடைகள் தான் உள்ளது.  இந்த நிலையில் மக்கள் ஆரோக்கியம் எப்படி நன்றாக இருக்கும்.    அரசு மருத்துவமனைகளை பார்த்தால் அது சாக்கடை அளவுக்கு மோசமாக உள்ளது.  

இவையெல்லாம் மாற வேண்டும்.  கல்வித் தரம் மாற வேண்டும்.  இதற்கெல்லாம் ஒரு திட்டத்தோடு வந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம்.  என் மீதான அன்பை கட்சிக்கான வாக்காக மாற்ற வேண்டும்.  அதனால் மக்களாகிய நீங்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும்.  ஆம்பூரில் பேசிவிட்டு அடுத்த ஊருக்கு செல்வதற்குள் இத்தனை பேரை மக்கள் நீதி மய்யத்தில் சேர்த்துவிட்டோம் என்ற தகவல் எனக்கு வர வேண்டும். இதையே தொண்டர்கள் ஒரு வேலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  மக்கள் திரண்டு வருகிறார்கள். அனைத்து ஊர்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.  இந்த பலத்தையெல்லாம் நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும். நாம் அவர்களுடையவர்களாக மாற வேண்டும்.  மக்களுடைய சேவகர்களாக நாம் மாற வேண்டும்.  அதற்கு மக்கள் நம் பக்கம் இருக்க வேண்டும்.  அதற்காக நம்முடைய கூட்டணியை மக்களுடன் தான் வைக்க வேண்டும்.   ஏனெனில் இது நேர்மையாளர்களின் கூட்டம்.  இத்தனை ஆர்வமும் வீண்போகக் கூடாது. இன்னும் 3 மாதங்கள் தான் உள்ளது.  

இங்கிருக்கும் விசையை தட்டி விட்டால் நம்முடைய தமிழ்நாட்டில் ஜனநாயகம் புத்துயிர் பெறும்.  மக்கள் நீதி மய்யம் கொடியை உயர்த்தி பிடியுங்கள் நாளை நமதாகும்.  

நாளை நமதாகும் :  தொண்டர்களிடயே கோஷம் எழுப்பிய கமல்ஹாசன்
நாளை நமதாகும் என்ற கோஷத்தை தொண்டர்களிடையே மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எழுப்பினார்.  தொடர்ந்து அவர் நாளை என்று கூறிய உடன் தொண்டர்கள் நமதாகும் என கோஷம் எழுப்பினர். இவ்வாறு 3 முறை கமலஹாசன் கோஷம் எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com