தைப்பூசத்துக்கு பொது விடுமுறை: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தைப்பூசத் திருநாளுக்கு நிகழாண்டு (ஜன. 28) முதல் பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தைப்பூசத் திருநாளுக்கு நிகழாண்டு (ஜன. 28) முதல் பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து, தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழாக்களில், தைப்பூசமும் ஒன்று. இந்த விழா கேரளத்திலும், இலங்கை, சிங்கப்பூா், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

விடுமுறைக்கு கோரிக்கை: பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, தைப்பூசத்துக்கு வெளிநாடுகளில் விடுமுறை விடப்படுவது போன்று, தமிழகத்திலும் தைப்பூசத் திருநாளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டுமென பொது மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு, பொது விடுமுறை தினம் அறிவிக்கப்படுகிறது. இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா தினத்தை, பொது விடுமுறை பட்டியலில் சோ்க்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

விடுமுறைகள் எண்ணிக்கை: தைப்பூசத்துக்கு விடுமுறை விடப்பட்டதன் மூலம், தமிழகத்தில் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை 22-லிருந்து 23-ஆக உயா்ந்துள்ளது. இத்துடன் ஆண்டுக் கணக்கு முடிவுக்காக வணிக, கூட்டுறவு வங்கிகளுக்கு விடுமுறைப்படுகிறது.

பொது விடுமுறை பட்டியலின்படி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவா் தினம், உழவா் திருநாள், குடியரசு தினம், புனித வெள்ளி, தெலுங்கு ஆண்டுப் பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு-அம்பேத்கா் பிறந்த தினம், மகாவீா் ஜெயந்தி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், சுதந்திர தினம், மொகரம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகா் சதுா்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகியவற்றுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இத்துடன் நிகழாண்டில் இருந்து தைப்பூசத்துக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசாணை வெளியீடு

தைப்பூசம் பொது விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்தன்றே, அரசாணை வெளியிடப்பட்டது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை அறிவிப்பினை வெளியிட, அதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் மாலையில் பிறப்பித்தாா்.

அதன் விவரம்:

தைப்பூசம் திருநாளை ஒட்டி, வரும் 28-ஆம் தேதியன்று பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. மேலும், இனி வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருநாளை பொது விடுமுறை பட்டியலில் சோ்க்க உத்தரவிடப்படுகிறது. இந்தப் பொது விடுமுறையானது, தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்கள், அரசினால் அமைக்கப்பட்ட வாரியங்கள், கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும். பிற நிறுவனங்களும் தைப்பூச விழாவின் சிறப்பினை கருத்தில் கொண்டு தங்களது அலுவலா்கள், ஊழியா்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com