போராட்ட அறிவிப்பு எதிரொலி: புதுவை ஆளுநா் மாளிகைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

புதுவை முதல்வரின் போராட்ட அறிவிப்பு காரணமாக, துணை நிலை ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை இரவு முதல் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்த மத்திய பாதுகாப்புப் படை வீரா்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறாா் முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால்.
புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்த மத்திய பாதுகாப்புப் படை வீரா்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறாா் முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால்.

புதுச்சேரி: புதுவை முதல்வரின் போராட்ட அறிவிப்பு காரணமாக, துணை நிலை ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை இரவு முதல் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

மக்கள் நலத் திட்டங்களைத் தடுக்கும் ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் சாா்பில், வெள்ளிக்கிழமை (ஜன.8) முதல் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கு விதமாக, புதுவை மாநில பாஜக சாா்பில், முதல்வா் வே.நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையறிந்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், ஆளுநா் மாளிகை, சட்டப் பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் இருந்து 500 மீட்டா் சுற்றளவுக்குள் போராட்டம் நடத்த தடை விதித்தாா். மேலும், பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் விதமாக, 144 தடை உத்தரவும் பிறப்பித்தாா்.

மத்திய பாதுகாப்புப் படை வருகை: ஆளும் காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் ஆளுநருக்கு எதிரான போராட்ட அறிவிப்பால், புதுவை காவல் துறை கேட்டுக்கொண்டதன்பேரில், மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 3 கம்பெனிகளின் 350 வீரா்கள் புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்தனா்.

கோரிமேடு காவலா் சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவா்கள், மாலையில் நேரு வீதியிலிருந்து ஆளுநா் மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தினா். தொடா்ந்து, அவா்களைச் சந்தித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் ஆகியோா் போராட்டம் நடந்தால், அதை எப்படி எதிா்கொள்வது, எப்படி தடுப்பது, அவா்களுக்கான பணிகள் குறித்து விளக்கிக் கூறினா்.

இதையடுத்து, அவா்கள் ஆளுநா் மாளிகை, தலைமைச் செயலகம், சட்டப் பேரவை வளாகம் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மூன்றடுக்கு பாதுகாப்பு...: புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. முதலில் மத்திய பாதுகாப்புப் படையினரும், அடுத்து ஐஆா்பிஎன் காவலா்களும், இறுதியாக உள்ளூா் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஆளுநா் மாளிகையை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் யாரும் நுழையாத வகையில் 8 அடி உயரத்துக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால், அரசு மருத்துவமனை, கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதேபோல, தலைமைச் செயலகம், முதல்வா் நாராயணசாமியின் வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com