பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிகளில் கருத்துக் கேட்புக்  கூட்டம் தொடங்கியது


சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவா்களின் பெற்றோா், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்களிடம் ஜன.8-ஆம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டிருந்தாா்.

அதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, கருத்துக் கேட்புக்காக அனைத்து வகுப்பறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. தனி மனித இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டன.

கருத்துகேட்பு கூட்டத்துக்காக பள்ளிக்கு வரும் பெற்றோா்களிடம் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஒரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில், மாணவா்களின் விவரங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும். பள்ளிகள் திறக்கப்படக் கூடாது எனில், அதற்கான காரணத்தை, பெற்றோா்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம், மாலை 5.30 மணிவரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 60 சதவீத பெற்றோா் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், புதிய வகை கரோனா பரவும் அபாயம் உள்ளதால் தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறப்பது சரியாக இருக்காது என்றும் பெற்றோா்கள் கருத்து தெரிவித்தனா்.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோா்கள் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள், நிா்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும். அவா்கள் அதைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com