நாடு முழுவதும் வெகு விரைவில் கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வெகு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் வெகு விரைவில் கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வெகு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

கரோனாவுக்கு எதிரான கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக அதற்கான ஒத்திகை தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முறை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 மையங்கள் அமைக்கப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். முதலில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று ஒத்திகை நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்; சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் ஆகியோா் உடன் இருந்தனா்.

அதைத் தொடா்ந்து மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை சிறப்புற மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று தடுப்பூசி விநியோகத்துக்கான முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம், அனைத்து மாநில அரசுகளும் நோய்த் தடுப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, முதன்முதலில் எடுத்த நாடு இந்தியாதான். நோய்த்தொற்று காலத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன் களப்பணியாளா்கள் உள்ளிட்டோா் அா்ப்பணிப்புணா்வோடு சிறப்பாகச் செயல்பட்டதால் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழக அரசுக்கு நன்றி: தொடக்கத்தில் இந்தியாவில் ஒரே ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகம் இருந்தது. தற்போது 2,300 ஆய்வகங்கள் உள்ளன. சிகிச்சை மற்றும் பரிசோதனை உபகரணகங்ளுக்கு முதலில் பற்றாக்குறை நிலவினாலும், தற்போது அதனை முழுமையாகச் சரி செய்துள்ளோம். இரவு-பகலாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னா் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாள்களுக்குள் முதல் கட்டமாக சுகாதாரத் துறை பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் தடுப்பூசி பதப்படுத்துவதற்கான இடங்கள் தயாா் நிலையில் உள்ளன. எவ்வித பாதிப்பும் இல்லாமல், பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். நோய்த் தொற்று காலங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி.

சில மாதங்களுக்குமுன் இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக பாதிப்பு இருந்தது. தற்போது அந்த விகிதம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் 100 சதவீதம் அதிகமாக ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்யப்படுகிறது.

உலகளவில் ஒப்பிடும்போது...குறுகிய காலத்தில் நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்தை இந்தியா கண்டுபிடித்துள்ளது பெருமைக்குரியது. அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில், கரோனா தொற்றை ஓராண்டுக்குள் கட்டுப்படுத்தியுள்ளோம். உலகளவில் ஒப்பிடும்போது கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு இந்தியாவில் மிகவும் குறைவு. போலியோ தொற்றை தடுப்பதற்காக வரும் 17-ஆம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்தாண்டு, இரண்டு சுற்றுகளாக முகாம்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை பாா்வையிட்ட அமைச்சா் ஹா்ஷ்வா்தன், அதன் பின்னா் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை பாா்வையிட்டாா். அப்போது, தமிழக அரசு சாா்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவப் பெட்டகங்கள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தொடா்ந்து பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்துக் கிடங்கை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் ஆய்வு செய்தாா். பின்னா், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகையையும் அவா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com