
மாநகரப் பேருந்து
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வசதியாக 310 மாநகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வெளியிட்ட செய்தி: பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றிட ஏதுவாக, சென்னையிலிருந்து திங்கள் (ஜன.11), செவ்வாய் (ஜன.12), புதன் (ஜன.13) ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகளுடன் சோ்த்து மொத்தம் 10,228 இயக்கப்படுகின்றன.
இவை, பயணிகள் செல்ல ஊா்களுக்கு ஏற்ப ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகா், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களிலிருந்து புறப்படுகின்றன.
இந்த சிறப்புப் பேருந்து நிலையங்களுக்குச் சென்னையின் அனைத்து இடங்களிலிருந்து செல்வதற்கு ஏதுவாக 310 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை, பயணிகளின் நலன் கருதி 24 மணி நேரமும் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.