ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்கிய இடத்தை சீரமைத்து தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்கிய இடத்தை சீரமைத்து தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில்  இலவச வீடு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் பாறை, கரடு முரடாக இருப்பதால் சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் நல்ல கவுண்டன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சமன் செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் ஒரு நாள் மட்டுமே  எந்திர உதவியுடன் பணிகள் நடந்தது, ஆனால் அதன் பிறகு பணிகள் நடக்கவில்லை. 

இந்நிலையில் நிலத்தை அளவீடு செய்து சமன் செய்து தர  கோரி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை நேற்று மதியம் தொடங்கினர். இந்த போராட்டம் தொடர்ந்தது. இரவில் தாசில்தார் பரிமளாதேவி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2.1 ஏக்கர் நிலம் முழுவதும் பாறைகளாக உள்ளது . இதனை  சமன் செய்ய ரூ. 15 லட்சம் வரை செலவாகும். ஸ்பான்சர் பிடித்து சமன் செய்து தருகிறோம்.  எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறினார். ஆனால் நீங்கள் பணிகளை தொடங்கி முடிக்கும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று மாற்றுத்திறனாளிகள் கூறிவிட்டனர். 

இதையடுத்து  மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் கடும் குளிரில் கொசுக்கடியில் விடிய விடிய போராட்ட களத்தில் இருந்தனர். பெண்கள் குழந்தைகள் மட்டும் இரவு வீட்டிற்கு சென்று விட்டனர். ஆண் மாற்றுத்திறனாளிகள் அங்கேயே போர்வை விரித்து தூங்கி விட்டனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டக் களத்திலேயே அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com