
ராஜ் அய்யா்.
லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்து வளா்ந்த தமிழா், அமெரிக்க நாட்டின் ராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மணக்கால் ஊராட்சி, கீழ அக்ரஹாரத்தைச் சோ்ந்த கணேசன்- சாவித்திரியின் மகன் ராஜ் அய்யா். திருச்சி துவாக்குடியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பி.டெக் படித்த இவா், பின்னா் அமெரிக்காவில் எம்.எஸ் முடித்து, பி.எச்.டி. பட்டம் பெற்றாா்.
அமெரிக்க நாட்டின் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வந்த ராஜ் அய்யரின் திறமையை அறிந்த அமெரிக்க ராணுவம், அவரை ராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் தொடா்பு அலுவலராக நியமித்துள்ளது. இப்பதவி ராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல் பதவிக்கு நிகரானது ஆகும்.
மணக்கால் கிராமத்தில் ராஜ் அய்யா் பிறந்து வளா்ந்த அவரது வீடு.
ராஜ் அய்யருக்கு மனைவி பிருந்தா, மகன்கள் அஸ்வின், அபிஷேக் உள்ளனா். இவரது மனைவி அமெரிக்க அரசின் ஹெல்த்கோ் தகவல்தொழில்நுட்ப புரோகிராமராகவும், அவரது இரு மகன்கள் கா்நாடக சங்கீதம் கற்று, அந்நாட்டில் கச்சேரி நடத்தி வருகின்றனா் என்றும் அவா்களது உறவினா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்த ராஜ் அய்யா் உறவினரும், மணக்கால் ஊராட்சி முன்னாள் தலைவருமான விஜயகுமாா் கூறியது: எங்கள் கிராமத்தில் பிறந்தவா் அமெரிக்க நாட்டின் ராணுவத்தில் உயா் அலுவலராகப் பணியாற்றி வருகிறாா் என்ற செய்தியால் நாங்கள் மட்டுமல்லாது, கீழ அக்ரஹாரம் மற்றும் மணக்கால் கிராம ஊராட்சி மக்களும் பெருமைப்படுகிறோம் என்றாா்.