விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன்

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன்

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

ஒவ்வொரு நகரத்தையும், தலைநகருக்கு நிகராக மாற்ற வேண்டும் என்னும் அடிநாதத்திலிருந்துதான் எங்கள் ஆட்சி கட்டமைப்பு அமையவிருக்கிறது. இது சின்ன ஊர், அது அதை விட சின்ன ஊர் என்று எண்ணாமல் இந்த ஊருக்குத் தனித்திறமையுள்ள ஊர், நாடு போற்றும் ஊராகவும், திறன் மேம்பாடு அதிகம் ஆகிவிட்டால் உலகம் போற்றும் ஊராகவும் மாற்ற முடியும்.

நதிக்கரை நாகரீகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் புலம்பெயர்ந்து சென்னைக்கு வந்து சாக்கடையோரம் ஏழ்மையில், கஷ்டத்தில், ஆரோக்கியமற்ற சூழலில் தொழில் தேடவோ அல்லது முனையவோ அவசியமில்லை. இருந்த இடத்திலிருந்து நம் அனைவரையும் இணைக்கும் விஞ்ஞானம் இன்று கைகூடிவிட்ட நிலையில் இதையெல்லாம் ஒருவருக்கு ஒருவர் இணைக்கும் ஒரு அரசியல் தேவை. அது நேர்மையாக இருக்க வேண்டும்.  

நேர்மையான அரசியல் என சொல்வதற்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும். அது எங்களிடம் இருக்கிறது. அதை நாங்கள் அசாதாரணமாக, அசட்டையாக உங்களிடம் பேசவில்லை. அது எங்கள் வாக்குறுதியாக நினைத்து உங்களிடம் பேசுகிறோம். எங்களுக்கு நாங்களே ஏற்படுத்திக்கொண்ட ஒரு வாழ்க்கை முறையாக அது இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

எங்களுக்கு இருக்கும் ஒரு சிறு கட்சி, இருந்தாலும் இப்படி கயவர்களை எதிர்க்கும் துணிச்சல் எங்களுக்கு எப்படி வந்தது. அதற்குக் காரணம் நேர்மை. இதுவழியே செல்வோம் என்ற தைரியம் தான்.  எங்கள் அரசியல் கொள்கையும்,  யுக்தியும், பலமும் ஒரே வார்த்தையில் அடங்கிவிட்டது, அது நேர்மை. இன்னும் சற்று விரிவாக விளக்க வேண்டுமெனில் மக்கள் நலம். இதுபுரிந்தால் போதுமானது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் என்ன, கொள்கைகள் என்ன என்றால், அதுவும் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதைப்படித்து யாரும் ஓட்டுப்போட்டதாக இந்த அரை நூற்றாண்டில் எனக்கு சந்தேகம் கூட வரவில்லை. ஆள் பார்த்து, சாதி பார்த்துத் தான் ஓட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறோம். 

இவன் சாதிப்பானா? என்று பார்த்து இதுவரை யாரையும் தேர்ந்தெடுத்ததில்லை. அதற்கான நேரம் வந்துவிட்டது. நம் தலைமுறை எண்ணவாயிற்று என்பதை நம் வீதிகளும், நம் சாக்கடைகளும் நமக்கு சேதி சொல்கின்றன. நமக்கு அடுத்த தலைமுறை நம்மைத் திட்டாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் இன்றே பணி துவங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கும் நாளிலிருந்து புதிய அரசியலுக்காக விதை போடத் துணிய வேண்டும்.

அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் இங்கே ஜவுளி தொழிலுக்கான கட்டமைப்புகள் விரைவில் உருவாக்கப்படும். இது நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதியல்ல. நாங்கள் செய்ய வேண்டும் என எங்களுக்குள் காலவரையுடன் போட்டுக்கொண்ட பட்டியல். இங்கே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

அதற்கான சூழல் இங்கு இருக்கிறது. விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது, உதவி செய்வது என்பது தர்ம காரியமல்ல, தலை காக்கும் காரியம். அதில் அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு மானியம் கொடுக்க வேண்டும். விவசாயம் விவசாயிகளுக்கு மட்டுமான வாழ்வாதாரம் அல்ல. நமக்கும் விவசாயம் தான் வாழ்வாதாரம். விவசாயம் இல்லாது தொழில்கள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் உணவுக்கு என்ன செய்வது.

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும். நான் விவசாயி என்று பொதுவெளியில் பெருமித்ததுடன் சொல்லும் நிலையை விவசாயிகளுக்கு உருவாக்க வேண்டும். விவசாயத்தில் ஆண்களுடன், பெண்களும் இணைந்து ஈடுபடுகின்றனர். விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு முழு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் எனப் பேசியபோது கேலி பேசியவர்கள், இப்போது நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கி இருக்கின்றனர். உச்சநீதிமன்றமே அதை வழிமொழிவது போல் தீரப்பை எழுதியது எங்களுக்குக் கிடைத்த பெருமை.

ஒவ்வொரு ஊரிலும் குண்டு, குழியுமான சாலைகள், சாக்கடையுமாக இருந்தால் எங்கு போனாலும் ஊருக்குள் நுழைய முடியாத சூழல் இருந்தால் எப்படி வியாபாரம் சிறக்கும்.  வீட்டிற்கு ஒரு கணினி என்பதை அடிப்படை உரிமையாகக் கருதுகிறோம். இது இலவசம் அல்ல, அரசு மக்களுக்காகச் செய்யும் முதலீடாகக் கருத வேண்டும்.

அரசுக்கும், மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற்றால் இடைத்தரகர்கள் ஒழிந்து போவார்கள் என நம்புகிறேன். சின்ன, சின்ன விஷயத்துக்குக் கூட லஞ்சம் கொடுத்துத்தான் வேலை நடக்கும் என்ற நிலையை மாற்றி, புதிய கலாச்சாரத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் உள்ளனர் என்றால்,  மக்கள் பணம் எந்த அளவுக்கு களவாடப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

மாண்புமிகு என ஒருவரை அழைப்பதால் அவர் மாண்புடையவராக மாட்டார். அதற்கான தகுதியை அவர் அடைய வேண்டும்.  பட்டங்கள் நமது செயலால் மக்கள் நமக்குத் தர வேண்டும். நாங்கள் பொறுப்புக்கு வந்தால் மக்கள் சேவகர்கள் கூறிக் கொள்வோம்.  படித்து, வேலை இல்லை என்ற நிலைக்கு மாற்றாக, திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி, அவர்களே வேலை வழங்கும் நிலைக்கு உயர்த்துவோம். உலக சந்தையை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். 

தமிழகத்தில் நிதி சுழற்சியை ஒரு டிரிலியண்ட் டாலராக தொழில்நுட்பம் மூலம் மாற்ற ஆசையாக உள்ளது. அதற்காக நீங்கள் உங்கள் விரலை அசைக்க வேண்டாம். உங்கள் விரலில் மறக்காமல் ஒரு பொட்டு வையுங்கள். அனைவரும் கூடி தேரிழுப்போம். வடமாக நானிருப்பேன். உங்கள் நேர்மையான இழுப்புக்கெல்லாம் நான் வருவேன் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com