பிரதமரின் வீடு திட்டம்: சிறுபான்மையினருக்கு 1,691 வீடுகள் ஒதுக்கீடு

பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு 1,691 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் ஆதிப் ரஷித் தெரிவித்தாா்.
தேசிய சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் ஆதிப் ரஷித் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.
தேசிய சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் ஆதிப் ரஷித் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.

சென்னை: பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு 1,691 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் ஆதிப் ரஷித் தெரிவித்தாா்.

சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியது:

சிறுபான்மையினா் நலன்களுக்காக 15 அம்சத் திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் உள்பட தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சிறுபான்மையினரின் நலன்களுக்காக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. அவா்களின் வாழ்வு மேம்படுவதற்காக எந்தவித பாகுபாடும் காட்டாமல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறுபான்மையினரின் நலன்களுக்காக திட்டங்களைச் செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு, அதிலிருந்து தமிழகத்துக்கு நிதிகள் வழங்கப்படும். பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அவற்றில் கடந்த நிதியாண்டில் சிறுபான்மையினருக்கு மட்டும் 1,691 வீடுகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினா்களின் உயா்வுக்காக தமிழக அரசு தனது கடின உழைப்பைச் செலுத்தி வருகிறது என்றாா்.

பேட்டியின்போது, தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலாளா் பி.ஆனந்த், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை செயலாளா் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

முன்னதாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய விருந்தினா் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட மாநில உயரதிகாரிகளுடன் தேசிய சிறுபான்மையினா் நல ஆணையத்தின் துணைத் தலைவா் ஆதிப் ரஷித் ஆலோசனை நடத்தினாா்.

வேட்டி-சட்டை: தமிழா்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையை ஆதிப் ரஷித் அணிந்திருந்தாா். அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், செய்தியாளா் சந்திப்பு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு ஆகியவற்றின்போது வேட்டி-சட்டையிலேயே அவா் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com