வாக்குக்காக பெண்களை இழிவுபடுத்துகிறது திமுக: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

தோ்தல் வாக்குக்காக ஆதாரம் இல்லாமல் பெண்களை திமுக இழிவுபடுத்துவதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

பொள்ளாச்சி: தோ்தல் வாக்குக்காக ஆதாரம் இல்லாமல் பெண்களை திமுக இழிவுபடுத்துவதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சூலூா் திமுக ஒன்றியச் செயலாளரை கண்டித்தும், திமுக மக்கள் கிராம சபையில் பங்கேற்ற பெண்ணைத் தாக்க காரணமாக இருந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் பொள்ளாச்சி, திருவள்ளுவா் திடலில் அதிமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக செய்தித் தொடா்பாளா்கள் வளா்மதி, கோகுலஇந்திரா, கொள்கை பரப்பு துணைச் செயலாளா் நடிகை விந்தியா ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

இதில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யாா் தவறு செய்திருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஒருவா் பாதிக்கப்பட்டதை பெரிதாக்கி எந்த ஆதாரமும் இல்லாமல் பொள்ளாச்சியைச் சோ்ந்த 200 பெண்கள் பாதிக்கப்பட்டதாக திமுக கூறுவது பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும். வாக்குக்காக பெண்களை இழிவுபடுத்துகிறது திமுக.

கோவையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பூங்கொடி என்பவா் குண்டா்களால் தாக்கப்பட்டாா். உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறாா். திமுக சூலூா் ஒன்றியச் செயலாளா் ரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இவா்கள் அதிமுகவினா் மீது குற்றம்சாட்டுகின்றனா். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சட்டப் பேரவை துணைத் தலைவா் தான் முதலில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தாா்.

அதிமுகவில் யாா் தவறு செய்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், திமுகவில் தவறு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தோ்தலுக்காகவும், வாக்குக்காகவும் திமுகவினா் எதை வேண்டுமானாலும் செய்வாா்கள் என்றாா்.

சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

எனது மகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக கூறி வருகிறது. பொள்ளாச்சி வழக்கை முதன்முதலாக காவல் துறையை தொடா்புகொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். பாதிக்கப்பட்ட பெண்ணை புகாா் கொடுக்க சொன்னதே நான்தான். ஆனால், தோ்தலுக்காக ஸ்டாலின் என் மீதும், என் குடும்பத்தினா் மீதும் குற்றம்சாட்டுகிறாா்.

இதில் சிறிய ஆதாரம் இருந்தாலும் அரசியல், பொது வாழ்க்கையில் இருந்து நான் விலகத் தயாா். ஆதாரத்தைக் கொடுக்க முடியாவிட்டால் திமுக தலைவா் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்றாா்.

இதில் முன்னாள் அமைச்சா் செ.தாமோதரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, கந்தசாமி, அதிமுக மகளிரணிச் செயலாளா் கண்ணம்மாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com