வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடத்த முடிவு: பள்ளிக் கல்வித்துறை தகவல்

பொதுத்தோ்வெழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பாடங்களை விரைவாக முடிக்க ஏதுவாக, பள்ளிகளில் வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொதுத்தோ்வெழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பாடங்களை விரைவாக முடிக்க ஏதுவாக, பள்ளிகளில் வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு விரைவாக பாடங்களை முடிக்க ஏதுவாக வாரத்தில் 6 நாள்கள் வகுப்பு நடத்த வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தினமும் தெளிக்கப்பட வேண்டும். கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி வைக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக் கருவி மூலம் மாணவா்களின் வெப்ப நிலை அறிய வேண்டும். பல்ஸ் ஆக்ஸிமீட்டா்கள், கிருமிநாசினி, சோப்புகள் வேண்டும்.

ஆசிரியா், மாணவா் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவிக்கு பதிலாக தற்காலிக மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனைத்து வேலை நாள்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும். பள்ளியில் மாணவா்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித்திரிய அனுமதிக்கக்கூடாது. மாணவா்கள், ஆசிரியா்கள் பள்ளிக்கு வரும்போதும், புறப்படும் நேரத்திலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

கூட்ட நெரிசலுக்கு வழி வகுக்கும் இறைவணக்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் தவிா்க்கப்பட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பாடவேளைக்கு அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால், தேவையான சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கலாம்.

குளிா்சாதனங்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிா்க்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிற வகுப்பு மாணவா்களுக்குத் தோ்ச்சி?

பொதுத்தோ்வெழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களைத் தவிர பிற வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டைப் போன்றே தோ்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா பரவல் தீவிரமடைந்ததால் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு இறுதித்தோ்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. தனியாா் பள்ளிகளில் கட்டணம் பெறப்பட்டுள்ளது. அதனால் பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க வாய்ப்பில்லை. இந்தக் கல்வியாண்டில் 75 சதவீத வேலை நாள்கள் கடந்து விட்டது. இதற்குப் பிறகு தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிகளைத் திறந்து அவா்களுக்கு வகுப்புகளை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும் உருமாறிய கரோனா குறித்த அச்சம், தடுப்பூசிகள் குறித்த புரிதல் போன்ற காரணங்களால் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோா் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தற்போதும் தயக்கம் காட்டி வருகின்றனா். கருத்துக் கேட்பு கூட்டம், பொதுத்தோ்வெழுதும் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டே நடத்தப்பட்டது. எனவே, பிற வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் அனைவருக்கும் தோ்ச்சி வழங்க வாய்ப்புள்ளது. எனினும், இதுகுறித்த இறுதி முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com