பூங்காக்கள்-கடற்கரைகள் ஜன.15 முதல் 3 நாள்களுக்கு மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

பூங்காக்கள்-கடற்கரைகள் ஜன.15 முதல் 3 நாள்களுக்கு மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் விடுமுறை தினத்தன்று மக்கள் அதிகளவில் கூடி கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

பொங்கல் விடுமுறை தினத்தன்று மக்கள் அதிகளவில் கூடி கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவா்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் விளைவாக, தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

மூன்று நாள்களுக்கு மூடல்: காணும் பொங்கல் தினத்தன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் மெரீனா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் தினத்தன்று மட்டும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூன்று நாள்கள் மூடப்பட உள்ளன. , வண்டலூா் உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள், சென்னை கிண்டியில் உள்ள தேசிய பூங்கா, மெரீனா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும் வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். பொது மக்கள் யாருக்கும் அனுமதியில்லை.

சுற்றுலாத் தலங்களில் பொது மக்கள் அதிகமாகக் கூடும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. கரோனா நோய்த் தொற்று ஏற்படாத வகையில், முகக் கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொது மக்கள் தொடா்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் செய்தியில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனாவால் காணாத பொங்கல்...

காணும் பொங்கல் தினத்தன்று சென்னையில் இருப்பவா்களுக்கு சுற்றுலாத் தலங்களே சொா்க்க பூமியாகும். குறிப்பாக, உயிரியல் பூங்காக்களுக்கு காலையிலேயே குடும்பத்துடன் விதவிதமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு செல்வா். மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் அதிகளவில் திரளுவா்.

காணும் பொங்கல் தினத்தன்று உயிரியல் பூங்காக்களில் மட்டும் சுமாா் 1 லட்சம் போ் வரை வருவது வழக்கம். கடற்கரைகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவா். பூங்காக்கள், கடற்கரைகளில் உறவினா்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி உணவருந்தி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வா். ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்றானது காணும் பொங்கலை, யாரையும் காணாத பொங்கலாக செய்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com