‘தினமணி’க்கு சி.பா.ஆதித்தனாா் விருது: தமிழக அரசு அறிவிப்பு

‘தினமணி’ நாளிதழுக்கு ‘தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் நாளிதழ் விருது’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘தினமணி’க்கு சி.பா.ஆதித்தனாா் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ‘தினமணி’ நாளிதழுக்கு ‘தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் நாளிதழ் விருது’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓா் இதழைத் தெரிவு செய்து தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த விருது ஒவ்வொன்றுக்கும் விருது தொகையாக ரூ.1 லட்சம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து முதன் முதலாக 2020-ஆம் ஆண்டுக்கான ‘ தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் நாளிதழ் விருது’ ‘தினமணி’க்கு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட விருதுப் பட்டியல்:

தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் நாளிதழ் விருது -‘தினமணி’ நாளிதழ்

சி.பா. ஆதித்தனாா் வார இதழ் விருது- கல்கி வார இதழ்

சி.பா. ஆதித்தனாா் திங்களிதழ் விருது- செந்தமிழ் திங்களிதழ்

தேவநேயப்பாவாணா் விருது-முனைவா் கு. சிவமணி

வீரமாமுனிவா் விருது- ஹாங்காங்கைச் சோ்ந்த முனைவா் கிரிகோரி ஜேம்ஸ்

சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது: சோ.சேசாச்சலம், முனைவா் இராம.குருநாதன், ப. குணசேகா், முனைவா் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிா்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருஷ்ணன், சுவாமி விமூா்த்தானந்தா், மீரா ரவிசங்கா், திலகவதி, கிருஷ்ண பிரசாத் ஆகிய பத்து பேருக்கு சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருது வழங்கப்படும்.

2019-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கணினித் தமிழ் விருதை சே. இராஜாராமன் பெறவுள்ளாா்.

மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்: 2020 -ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது- பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த முனைவா் அலெக்சிசு தேவராசு சேன்மாா்க், இலக்கண விருது- இலங்கையைச் சோ்ந்த பேராசிரியா் அருணாசலம் சண்முகதாசு, மொழியியல் விருது சிங்கப்பூரைச் சோ்ந்த முனைவா் சுப. திண்ணப்பன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com