'விவசாயிகள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை': ராகுல் குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி

விவசாயிகளின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசுக்கு நண்பர்களாக உள்ள 4 பேருக்காக வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட தில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானத்தில் புறப்பட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மதுரை வந்தடைந்தார்.

அவருக்கு விமான நிலையத்திலும், அவனியாபுரத்திலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து அவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று வீரர்கள் காளைகளை அடக்குவதை பார்வையிட்டார்.

பின்னர் மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை உண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் . ஜல்லிக்கட்டு குறித்து கேள்விப்பட்ட நான் இன்று அதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது தமிழ் மக்கள் ஏன் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கிறார்கள் என அறிந்து கொண்டேன்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு காளைகளை துன்புறுத்தும் என சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று நேரடியாக ஜல்லிக்கட்டை பார்த்ததன் அடிப்படையில் சொல்கிறேன். அதற்கான வாய்ப்பே இல்லை. நான் இங்கு வந்ததற்கான மற்றொரு காரணம் அரசு நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல் தெரிகிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளை, மொழியை நசுக்குவதன் மூலம்  தமிழ் உணர்வை நசுக்கிவிடலாம் என் எண்ணுகிறது. அவர்களுக்கு தர என்னிடம் செய்தி உள்ளது. ஒன்று தமிழ் உணர்வை கலாச்சாரத்தை யாராலும் நசுக்க இயலாது. இரண்டாவது தமிழுணர்வை நசுக்குவது நமது நாட்டிற்கு செய்யும் மிக மோசமான செயல். பல கலாசாரங்கள் நமது நாட்டில் உள்ளன. அவை தாம் நமது தேசத்தின் உயிர் போன்றவை.

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம், ஒரு குறிப்பிட்ட மொழி என்பது இல்லை. பல மொழிகள் கலாசாரங்கள் நமது நாட்டில் உள்ளன. தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன். கடந்த காலம் குறித்த பலவற்றை அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர்.  அதோடு எதை நோக்கி நாடு நகர வேண்டுமென்ற திசையையும் காட்டியுள்ளனர்.

ஆகவே அவர்களுக்கும், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன். 

அரசு விவசாயிகளை புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் சதி செய்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.  அவர்களின் நண்பர்களின் நலனுக்காக  அழிக்க சதி செய்கிறது. விவசாயிகளைச் சார்ந்திருக்கும் விசயத்தை, அரசின் ஒரு சில நண்பர்களைச் சார்ந்திருக்குமாறு மாற்ற நினைக் கிறது விவசாயிகளை புறக்கணிக்கிறார்கள்.

விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பானவர்கள். யாராவது விவசாயிகளை நசுக்கி, வளம் பெறலாம் என  எண்ணினால், அவர்கள் நமது வரலாற்றை பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் விவசாயிகள் பலவீனமானார்களோ அப்போதெல்லாம் நாடும் பலவீனமடைந்துள்ளது.

இந்த நேரத்தில் ஒரு கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன். விவசாயிகளை நசுக்கி, ஒரு சில வணிக அதிபர்களுக்கு உதவுகிறீர்கள். கரோனா காலத்தில் சாதாரண மனிதனுக்கு உதவவில்லை. இந்திய நாட்டின் பிரதமரோ அல்லது தொழிலதிபர்களின் பிரதமரா என நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்.

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவிய போது அதுகுறித்து எதுவும் பேசாதது ஏன் என தெரியவில்லை. இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் உள்ள விவகாரத்தில் முற்றிலுமாக அமைதி காப்பது ஏன்? இவைதான் நான் கேட்க விரும்புபவை. நான் விவசாயிகளுக்கு, ஆதரவு தெரிவிக்கிறேன். அவர்களோடு தொடர்ச்சியாக நிற்பேன். இந்த சட்டங்களை திரும்பப்பெற அரசு கட்டாயப்படுத்தப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com