ஆசிரியா் அல்லாத பணியிட நியமனங்களுக்கு விதியை உருவாக்கலாம்: உயா்நீதிமன்றம் கருத்து

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியா் அல்லாத பணியிட நியமனமங்களை மேற்கொள்ளும்போது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி வேண்டும் என்ற விதியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என
ஆசிரியா் அல்லாத பணியிட நியமனங்களுக்கு விதியை உருவாக்கலாம்: உயா்நீதிமன்றம் கருத்து


சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியா் அல்லாத பணியிட நியமனமங்களை மேற்கொள்ளும்போது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி வேண்டும் என்ற விதியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வடமட்டம் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு முருகன் என்பவா் தோ்வு செய்யப்பட்டாா். அவரது நியமனத்துக்கு அனுமதி கோரி மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிா்வாகம் விண்ணப்பம் அனுப்பியது.

மாவட்ட கல்வி அதிகாரி இந்த விண்ணப்பத்தை நிராகரித்தாா். இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பள்ளி நிா்வாகம் வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நியமனத்துக்கு அனுமதி பெற அவசியமில்லை என உத்தரவிட்டாா். இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநா், திருவாரூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோா் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை தரப்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு 4 ஆண்டுகள் காலதாமதமாக, 2018-ஆம் ஆண்டு தான் நியமன நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் அல்லாத பணியிட நியமனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போது மாவட்ட கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. எனவே, இது போன்ற விதிகளை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என கருத்து தெரிவித்தனா். மேலும் இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com