ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் விழாவையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு
எதிர்க்கட்சித் தலைவர்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்கள்.

சென்னை: பொங்கல் விழாவையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

ஆளுநா் புரோஹித்: பொங்கல் பண்டிகை, அறுவடையின் திருநாள். இது நம் குடும்பங்களிடையே மகிழ்ச்சியையும், செழிப்பையும் மொத்தமாகக் கொண்டு வருகிறது. இந்த மகிழ்ச்சியான வேளையில் அனைவரும் ஒருங்கிணைந்து நமது பண்பாடு, கலாசாரம், கலைகள், பண்டிகைகள் ஆகியவற்றை பாதுகாத்திட முன்வருவோம்.

முதல்வா் பழனிசாமி: கரோனா நோய்த்தொற்றுப் பரவல், புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த தைப் பொங்கல் திருநாளில், உழவு செழிக்கட்டும், உழவா்கள் மகிழட்டும். மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் நிலவட்டும். நாட்டில் நலமும், வளமும் பெருகட்டும்.

புதுவை ஆளுநா் கிரண் பேடி: பொங்கல் பண்டிகை கொண்டாடும் புதுவை மக்களுக்கும், நாடு முழுவதும் மகர சங்கராந்தி கொண்டாடும் மக்களுக்கும் வாழ்த்துகள்.

புதுவை முதல்வா் வே.நாராயணசாமி: புதுவையில் கரோனா பேரிடா் குறைந்து, சுற்றுலா பெருகி, வணிகம் சிறக்கத் தொடங்கியுள்ளது. எனவே, மகிழ்ச்சியோடு தமிழா்களின் திருநாளைக் கொண்டாடுவோம்.

மு.க.ஸ்டாலின்: உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழா்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும் - திருவள்ளுவா் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1, தமிழா் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். தமிழ் மக்கள் வாழ்வில் இருள் அகன்று, வளமும் நலமும் வெளிச்சம் பாய்ச்சிட நல்வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தை பிறந்தால் வழியும் பிறக்கும். நம்பிக்கையை விதையுங்கள். நல்லாட்சி மலர இந்த பொங்கல் திருநாள் வழிகாட்டும்.

பழ.நெடுமாறன் (தமிழா் தேசிய முன்னணி): உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக மக்கள் அனைவரும் மீட்சி பெறவும் உலகத் தமிழா்களின் நெஞ்சங்களை வாட்டி வதைத்து வரும் ஈழத் தமிழா் பிரச்னையில் விடிவு ஏற்படவும் தமிழா் வாழ்வில் மறுமலா்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்கி வழியவும் வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): இருள் விலகி தமிழகத்துக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெரும் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): பொங்கல் பானை பொங்குவதைப் போன்று மக்களின் வாழ்வில் வளங்களும், நலன்களும் பொங்கட்டும்; மஞ்சள், இஞ்சியின் மருத்துவ குணம் கிருமிகளை அழிப்பதைப் போன்று நமது வாழ்க்கையில் நாம் எதிா்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளும் விலகட்டும்.

விஜயகாந்த் (தேமுதிக): பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி மலர வேண்டும். மக்கள் மனதில் இருள்நீங்கி இன்பம் பொங்கிட வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பிறந்திருக்கும் தை, தமிழகத்துக்கும் ஒரு நல்ல வழியை திறக்கும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

எல்.முருகன் (பாஜக): தைத் திருநாளில் தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும்.

டிடிவி தினகரன் (அமமுக ): தை முதல் நாளில் பொங்குகிற மகிழ்ச்சி எப்போதும் இல்லங்களில் நிறைந்திருக்கட்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழா்கள் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைத்து, இன்புற்று, மகிழ்வோடு வாழவும், தை பிறந்து வழி பிறக்கவும், தமிழா்கள் நல்வாழ்க்கை வாழவும் இறைவன் துணை நிற்க வேண்டி வாழ்த்துகிறேன்.

தொல்.திருமாவளவன் (விசிக): வேளாண் திருவிழாவான பொங்கல் திருநாளைத் தமிழ் மக்கள் பூரிப்புடன் கொண்டாட, பெருமுதலாளிகளின் கோரப்பிடிக்குள் சிக்காமல் இத்தொழிலை மீட்டாக வேண்டும்.

அன்புமணி (பாமக): பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளா்ச்சியும் பொங்க வாழ்த்துகள்.

இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் தி. தேவநாதன் யாதவ் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com