பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் உபரிநீர் வெளியேற்றம் குறைப்பு

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் வியாழக்கிழமை காலை முதல் குறைக்கப்பட்டுள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் உபரிநீர் வெளியேற்றம் குறைப்பு

அம்பாசமுத்திரம் : திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் வியாழக்கிழமை காலை முதல் குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இரண்டு நாள்களுக்கு கன மழை இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளிலிருந்து 50 ஆயிரம் கன அடிக்கும் மேலாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் தொடர்ந்து 5 நாள்களாக தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு இருந்து வருகிறது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான பாபநாசம், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகள் பேரபாயப் பகுதியாக எச்சரிக்கப்பட்டு தேசிய மீட்புக் குழுவினர் இரண்டு நாள்களாக முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு முதல் மணிமுத்தாறு பாபநாசம் அணைகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து பாபநாசம் யானைப் பாலத்தில் வெள்ள நீர் சென்று காரையாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு போக்குவரத்து செல்ல முடியாத வகையில் சாலை துண்டிக்கப்பட்டது.

முக்கூடல், சேரன்மகாதேவி கரையோரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெருமளவு விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மணிமுத்தாறு அணையிலிருந்து வரலாறு காணாத வகையில் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து அணை அடிவாரத்தில் உள்ள பாலத்தை மூழ்கியபடி வெள்ள நீர் சென்றது.

மணிமுத்தாறு அணையில் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் சேதமடைந்துள்ள அடிவாரத்தில் உள்ள பாலம்
மணிமுத்தாறு அணையில் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் சேதமடைந்துள்ள அடிவாரத்தில் உள்ள பாலம்

இதனால் பாலம் பெயர்ந்து சேதமடைந்தது. இதையடுத்து அந்தப் பாலம் வழியே யாரும் அனுமதிக்கப்படவில்லை. மணிமுத்தாறு - மாஞ்சோலை மலைச்சாலையில் செவ்வாய்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மண் சரிவு சீரமைக்கப்படாததால் இரண்டாவது நாளாக மாஞ்சோலைக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பொங்கலுக்கு பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

மணிமுத்தாறு அணையில் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் சேதமடைந்துள்ள அடிவாரத்தில் உள்ள பாலம்
மணிமுத்தாறு அணையில் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் சேதமடைந்துள்ள அடிவாரத்தில் உள்ள பாலம்

இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது. புதன் காலை நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து 20,285.28 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

மணிமுத்தாறு அணையிலிருந்து 6,995 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அணையில் இருந்து 3,062 கன அடியும், ராமநதி அணையிலிருந்து 569.09 கன அடியும், கருப்பாநதியிலிருந்து 2279 கன அடியும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.


புதன்கிழமை காலை 7 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பாபநாசத்தில் அதிகபட்சமாக 178, மணிமுத்தாறு 162, சேர்வலாறு 120, நம்பியாறு 50, அம்பாசமுத்திரம் 91.

தென்காசி மாவட்டத்தில் அதிக பட்சமாக கடனாநதி 80, ராமநதி 40, தென்காசி 68.4, செங்கோட்டை 41, சங்கரன்கோயில் 46, சிவகிரி 40.

தற்போது மழை பொழிவு குறைந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு கன மழை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அணையில் தற்போது நீர்வரத்து குறைந்து ஒரே சீராக உள்ளது. எனவே நீர்வரத்து குறையும் வரை அணையிலிருந்து தற்போது திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைய வாய்ப்பில்லை.

மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தொடர்ந்து 6ஆவது நாளாக கன மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com