நெல்லை: தாமிரவருணி வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தினர் மீட்பு

முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் தாமிரவருணி வெள்ளத்தின் நடுவே சிக்கித் தத்தளத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் உடன் மீட்புக் குழுவினர்
மீட்கப்பட்டவர்கள் உடன் மீட்புக் குழுவினர்

ஆலங்குளம்: முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் தாமிரவருணி வெள்ளத்தின் நடுவே சிக்கித் தத்தளத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே அரியநாயகிபுரம் பொட்டல் காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (27). இவருடைய மனைவி முத்துமாரி (25) மகன் சுரேஷ் (7), மகள் பேபி (5), மற்றும் முத்துமாரியின் தாய் ராமு (வயது 50) ஆகியோர் புதன்கிழமை மாலை  ஊரின் அருகே  வாய்க்கால் பகுதிக்கும் தாமிரவருணி ஆற்று பகுதிக்கும் இடையே உள்ள  கோயிலுக்கு வழிபடுவதற்காக  சென்றுள்ளனர். 

அப்போது ஆறு மற்றும் வாய்க்காலில் குறைவாகவே தண்ணீர் வந்துள்ளது. எனவே சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி விடலாம் என்று நினைத்து  குடும்பத்தினரை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அரவிந்த். 

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஐந்து நாட்களாக பெய்யும் கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைப்பகுதியில் இருந்து சுமார் 50 ஆயிரம் கன அடிக்கும் மேல் திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

இவர்கள்  அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வருவதற்கு முன் கோயிலை வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் பாதுகாப்பு கருதி  அனைவரும் கோயிலின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துள்ளனர்.  

பின்னர் செல்லிடப்பேசி வாயிலாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் அரவிந்த். தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்ரமணி தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்  12 பேர்  வெள்ளத்தில் தத்தளித்த அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு அந்த ஐந்து நபர்களையும் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரர்கள் சுப்பிரமணியன், ஆல்பர்ட், ராஜா, திருமலைக்குமார், ரமேஷ், எஸ்.எஸ்.முருகன் , கொம்பையா, தனசிங் ஆகியோர் 8 மணி நேரத்திற்கு மேலாக போராடி பைபர் படகு மூலமாக கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று ஐவரையும் பத்திரமாக சுமார் 1 மணி அளவில் மீட்டனர். 

நள்ளிரவு நேரத்தில் 5 உயிர்களைக் காப்பாற்றிய மீட்புக் குழுவினரை கிராம மக்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com