நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்


திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

திருநெல்வேலி ஊரின் பெயர்க்காரணத்தை விளக்கும் வரலாற்று நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இம்மாதம் 22 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

தைப்பூச நாளான இம் மாதம் 28 ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தில் தாமிரவருணி நதியின் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு சிறப்புத் தீபாராதனை முடிந்ததும் தீர்த்தவாரி நடைபெறும்.

இம் மாதம் 29-ஆம் தேதி சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது.

30-ஆம் தேதி சத்திர புஷ்கரணி என்றழைக்கப்படும் வெளி தெப்பக்குளத்தில்  இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

படம்: சாய் வெங்கடேஷ்.உ.ச
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com