நெல்லை மாவட்டத்தில் வாழை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை!

திருநெல்வேலி மாவட்டத்தில் தை மற்றும் மாசிப்பட்டத்தில் அறுவடை செய்யப்படும் வாழைகளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வாழை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை!
நெல்லை மாவட்டத்தில் வாழை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை!


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தை மற்றும் மாசிப்பட்டத்தில் அறுவடை செய்யப்படும் வாழைகளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பணப்பயிர்களில் ஒன்றான வாழை பயிரிடப்படுகிறது. நாட்டு வாழை,  ரோபஸ்டா, ரதகதளி, கதளி, கோழிக்கூடு, ஏத்தன் உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால், ஏத்தன் வகைகளே பெரும்பான்மையாகப் பயிரிடப்படுகிறது. ஏத்தன் வாழைகளைப் பொருத்தமட்டில் அதில்இருந்து இலையை அறுவடை செய்து விற்பனை செய்ய இயலாது. காய்களை மட்டுமே விற்பனை செய்யமுடியும். 

அறுவடை செய்த வாழைக்காய்கள்
அறுவடை செய்த வாழைக்காய்கள்

அறுவடை தீவிரம்: இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வட்டாரத்திலும், திருநெல்வேலியில் சுத்தமல்லி, பழவூர், கொண்டாநகரம், கல்லூர், மானூர், ரஸ்தா சுற்றுவட்டார பகுதிகளிலும் தை, மாசிப்பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. காற்றுக்காலத்திற்கு பின்பு குலைதள்ளுவதால் இந்த வாழைகளுக்கு கம்பு கொடுக்கப்படுவதில்லை. களக்காடு, திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி, சித்திரை பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதி மண் வளம் காரணமாக அங்கு விளையும் ஏத்தன் காய்கள் மிகவும் திரட்சியாகவும், குலைகள் எடை அதிகமாகவும் இருக்கும்.

 நிகழாண்டில் தை-மாசி பட்டத்திற்கான அறுவடை தீவிரமடைந்துள்ளது. சுத்தமல்லிசுற்றுவட்டார பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் முகாமிட்டு வாழைக்காய்களை வாங்கிச் செல்கிறார்கள். வாழைக்காய்கள் சுமக்கும் பணிக்கு தொழிலாளர்கள் மட்டுமன்றி கல்லூரி மாணவர்களும் பலர் களமிறங்கியுள்ளனர். இங்கு சேகரிக்கப்படும் வாழைகள் அனைத்தும் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முதல்தர வாழைக்காய்கள் அனைத்தும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்றவை சிப்ஸ்களாக தயாரித்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மீண்டும் தமிழகத்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

அறுவடை செய்த வாழைக்காய்களை சுமந்து செல்லும் தொழிலாளர்கள்
அறுவடை செய்த வாழைக்காய்களை சுமந்து செல்லும் தொழிலாளர்கள்

விலை வீழ்ச்சி: இதுகுறித்து பழவூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், திருநெல்வேலி வட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தை}மாசி பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்துள்ளோம். வயலில் கன்று போடுவதில் இருந்து உரம், வறட்சிகாலத்தில் விலை கொடுத்து கிணற்று நீர் பாய்ச்சுவது உள்பட ஒரு வாழைக்கு குறைந்தபட்சம் ரூ.100 வரை ஆகிறது. எங்கள் பகுதியில் மண் வளம் காரணமாக அதிகபட்சம் 7 கிலோ வரையே ஒரு குலை இருக்கும். களக்காடு வட்டாரத்தில் 15 கிலோ வரை இருக்கும். முந்தி வெட்டுவதால் எங்கள் பகுதிக்கு ஓரளவு விலை இருக்கும். கடந்தஆண்டில் ஏத்தன் வாழைக்காய் கிலோ ரூ.28 முதல் ரூ.35 வரை வெட்டிய நிலையில், நிகழாண்டில் கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரையே வாங்கப்படுகிறது. ஏற்கெனவே அண்மையில் பெய்த தொடர்மழையால் நெல் பயிர்கள் சேதமாகி நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம். இப்போது வாழையின் விலையும் வீழ்ச்சியடைந்துவிட்டதால் செய்வதறியாது திகைத்து வருகிறோம். 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வாழைக்காய் சந்தை, குளிர்பதன கிட்டங்கி வசதிகள் போதிய அளவில் இல்லை. கேரள மொத்த வியாபாரிகளை மட்டுமே நம்பி வாழை சாகுபடி உள்ளதால் அடிக்கடி நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது. வாழைக்காய் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், அரசு கொள்முதல்நிலையங்களை அமைத்து நஷ்டத்தைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

படங்கள்: சாய் வெங்கடேஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com