புதுச்சேரியில் திமுகவின் நிலைப்பாடு விரைவில் மாறிவிடும்: கே.எஸ்.அழகிரி

புதுச்சேரியை பொறுத்தவரை கூட்டணி தொடர்பாக திமுகவின் இப்போதைய நிலைப்பாடு விரைவில் மாறிவிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
புதுச்சேரியில் திமுகவின் நிலைப்பாடு விரைவில் மாறிவிடும்: கே.எஸ்.அழகிரி
புதுச்சேரியில் திமுகவின் நிலைப்பாடு விரைவில் மாறிவிடும்: கே.எஸ்.அழகிரி

ஈரோடு: புதுச்சேரியை பொறுத்தவரை கூட்டணி தொடர்பாக திமுகவின் இப்போதைய நிலைப்பாடு விரைவில் மாறிவிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 24ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு நகரில் பன்னீர்செல்வம் பூங்கா முன்பு அவர் பேசுகிறார். முழுமையான சுற்றுப்பயண விவரம் வியாழக்கிழமை(ஜனவரி21) வெளியிடப்படும்.

இந்தியாவிலேயே மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதன் முதலில் காங்கிரஸ் கட்சி தான் குரல் கொடுத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுதத்துள்ளார். விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் அவர் விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டங்களை ஆதரிப்பது ஆச்சரியமாக உள்ளது.  இதில் இருந்து யார் உண்மையான விவசாயி என்று மக்களுக்கு தெரியும்.
 
வேளாண் சட்டங்களால் விவசாயம் அழிந்து போகும். சிறு வியாபாரிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை இழந்துவிடுவார்கள். பொதுவிநியோக முறை இல்லாமல் போய்விடும். குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் போய்விடும்.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி உரிமம் கொடுக்காமல் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டதால் அந்த நிறுவனம் முடங்கிக்கிடக்கிறது. இதேபோன்று தான் வேளாண் சட்டங்களால் விவசாயம் பெரு நிறுவனங்களின் கைகளில் சிக்கிக்கொள்ளும். இதனால் சாதாரண விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். 2 ஜியை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தவறு நடந்ததாக நிரூபிக்கவில்லை. இந்த வழக்கு தேர்தலுக்காக புனையப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.  அதில் நீட் தேர்வு ரத்து, வேளாண்மை சட்டம் ரத்து, எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் குறித்து முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் நடத்த வேண்டியதில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட மாநிலங்களில் நீட் தேர்வு நடத்துவது தப்பில்லை. ஆனால் தமிழகத்தில் மாநில கல்வி முறையை பின்பற்றி படிக்கின்றனர்.  தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்போம். ஏனென்றால் அவரும் மதச்சார்பற்ற கருத்துகளை கூறி வருகிறார். நாங்களும் அதைப்பற்றி தான் பேசி வருகிறோம்.  எங்களுடைய கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. எங்கள் கூட்டணி மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை விட சட்டப்பேரவை தேர்தலில் மிகச்சிறப்பான வெற்றி பெறுவோம். மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தாலும், ஆட்சி அதிகாரம் வரவில்லை. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தால் கல்விக் கடனை ரத்து செய்வோம்.  நீட் தேர்வை எழுத வேண்டாம் என அறிவிப்போம். இதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு.  

புதுச்சேரியை பொறுத்தவரை கூட்டணியில் திமுகவின் இப்போதைய நிலைப்பாடு விரைவில் மாறிவிடும். சிறையில் இருந்து யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம். அதில் தவறு இல்லை. தண்டனை காலம் முடிந்து சசிகலா வெளியில் வருவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. தென் இந்தியாவில் ராகுல்காந்திக்கு அதிக செல்வாக்கு உள்ளது. மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்த அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தனர் என்றார்.

ஆலோசனைக் கூட்டம்:
முன்னதாக ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து பேசினார். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராகுல்காந்தி வருகை குறித்தும் அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், திருமகன் ஈவெரா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com