பிஏபி பாசனத் தண்ணீரை முறையாக வழங்கக்கோரி காங்கயத்தில் விவசாயிகள் 3 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

பாசனத் தண்ணீரை வழங்கக் கோரி இப்பகுதி விவசாயிகள் 3 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயத்தில், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்து, ஆதரவு தெரிவிக்கும் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, பாஜக மாநில விவசாய அணித்  தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர்.
காங்கயத்தில், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்து, ஆதரவு தெரிவிக்கும் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர்.

காங்கயம்: காங்கயத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் (பிஏபி) கீழ் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான பாசனத் தண்ணீரை வழங்கக் கோரி இப்பகுதி விவசாயிகள் 3 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கயம் நகரம், கோவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரத போராட்டம் துவங்கப்பட்டது. இதில் 23 விவசாயிகள்  தொடர்ந்து சாகும் வரை உண்ணாநிலை என்ற நிலையை எடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து   நடைபெற்று வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உரிய தண்ணீரை பெற்றும், வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் அதிகாரிகள் ஊழல் செயல்களில் ஈடுபடுவதாகவும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி தண்ணீர் திறப்பில் மெத்தனப் போக்கோடு செயல்படுவதாகவும் விவசாயி புகார் தெரிவிக்கின்றனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த போராட்டம் வெற்றி பெறவேண்டும், அதே நேரத்தில் அவர்களுக்கான தண்ணீர் கிடைக்க தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்த பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com