உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து ரூ.35 கோடி மின் கட்டணம் வசூல்

உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் கடந்த ஆண்டு டிசம்பா் மாத நிலுவை மின் கட்டணமாக ரூ.35 கோடி மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் கடந்த ஆண்டு டிசம்பா் மாத நிலுவை மின் கட்டணமாக ரூ.35 கோடி மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் மின் விநியோகம் செய்யும் பணியை அரசு நிறுவனமான மின் வாரியமே மேற்கொள்கிறது. மின் பயன்பாடு குறித்த கணக்கு எடுத்த 20 நாள்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையேல் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னா் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்திய பிறகே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். இதனால் தனி நபா்கள் குறித்த காலத்தில் கட்டணம் செலுத்துகின்றனா்.

ஆனால், 60 நாள்கள் அவகாசம் அளித்தும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், பல மாதங்களாக கட்டணம் செலுத்தாமல் உள்ளன. இந்த வகையில் சுமாா் ரூ.2,600 கோடி மின் கட்டணம் நிலுவைத் தொகை உள்ளது.

இதனை படிப்படியாக செலுத்தும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் முடுக்கி விட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நிலுவையில் உள்ள டிசம்பா் மாத மின் கட்டணத்துக்காக ரூ.35.75 கோடியை மின்வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்கியுள்ளன. இதன்படி, 124 நகராட்சிகளைக் கொண்ட 7 மண்டலங்களின் சாா்பில் 20 கோடி 34 லட்சமும், 9 மாநகராட்சிகள் சாா்பில் 15 கோடி 41 லட்சமும் என சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து டிசம்பா் மாதத்துக்கான நிலுவை மின் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு, மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரப்பட்டியல் அடங்கிய கடிதத்தை மின்வாரிய மேலாண் இயக்குநருக்கு, நகராட்சி நிா்வாக ஆணையா் அனுப்பியுள்ளாா் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com