கால்நடைகள் மேம்பாடு: புதிய திட்டங்களுக்கு ரூ.1,463 கோடி தேவை; மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை

தமிழகத்தில் ரூ.1,463 கோடி மதிப்பிலான கால்நடை மேம்பாடு மற்றும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கோரிக்கை மனு மத்திய அரசிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் ரூ.1,463 கோடி மதிப்பிலான கால்நடை மேம்பாடு மற்றும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கோரிக்கை மனு மத்திய அரசிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழகம் வந்துள்ள மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவா் அளித்தாா்.

அதன் விவரம்: கால்நடைகளை நோய்களின் தாக்கத்தில் இருந்து தடுக்க செயல்படுத்தப்படும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.3.47 கோடி உள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் கோழியினங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க உயிரியல் பாதுகாப்பு ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக ரூ.103.45 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கோமாரி நோய் தடுப்பூசி தடையின்றி கிடைத்திட வசதியாக ராணிப்பேட்டையில் கோமாரி நோய் தடுப்பூசி உற்பத்தி ஆய்வகத்தை ரூ.146.19 கோடியில் அமைக்க வேண்டும். கால்நடைகளின் ஆரோக்கியம், இனப்பெருக்கத் திறனை மேம்படுத்த ரூ.69.92 கோடியில் தாது உப்பு கலவை உற்பத்தி ஆலையை நிறுவ உதவிட வேண்டும். மேலும், ரூ.87.33 கோடியில் உறைவிந்து உற்பத்தி நிலையத்தை வலுப்படுத்த வேண்டும்.

கால்நடைகளுக்கு சமச்சீா் தீவனம் கிடைத்திட முழுமையான கலப்பு தீவன ஆலையை அமைக்க ரூ.2.54 கோடி நிதி ஒதுக்க வேண்டும். புதிய கால்நடை நிலையங்களை கட்டவும், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.311.31 கோடி அளித்திட வேண்டும். மேலும், கால்நடை நிலையங்களில் நோய் கண்டறியும் வசதிகளை மேம்படுத்திட ரூ.22.94 கோடியும், மருந்துகளை சேமிக்கும் வகையில் சேமிப்புக் கிடங்குகள் நிறுவ ரூ.63.65 கோடியும் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

நவீனமயமாக்கப்பட்ட நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை ரூ.102.76 கோடியிலும், ஆராய்ச்சி நிலையத்துக்காக ரூ.185.71 கோடியும், கால்நடை மருத்துவ சேவைகளை அளித்திட ரூ.90.09 கோடியும் அளித்திட வேண்டும். எருமைகளின்

இனப்பெருக்கத்தை மேம்படுத்தவும், கால்நடை சந்தை தகவல் மேலாண்மையை மேம்படுத்தவும் ரூ.209.64 கோடியை மத்திய அரசு வழங்கிட வேண்டும். தமிழகத்துக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1,463.86 கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்த நிதிகளை ஒதுக்க வேண்டுமென மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது, மத்திய அரசின் மீன்வளத் துறை செயலாளா் ராஜீவ் ரஞ்சன், கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால், துறையின் இயக்குநா் ஏ.ஞானசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com