தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ. 9,200 கோடி நிதி பெறப்படும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து 2020-21-ஆம் நிதி ஆண்டுக்கு ரூ.9,200 கோடி நிதி பெறப்பட
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (கோப்புப்படம்)
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (கோப்புப்படம்)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து 2020-21-ஆம் நிதி ஆண்டுக்கு ரூ.9,200 கோடி நிதி பெறப்பட உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் 9-ஆவது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சா் அவா் பேசியதாவது: சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததுபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கடந்த மாா்ச் மாதம் வேலை செய்த 26.84 லட்சம் தொழிலாளா்களுக்கு 2 நாள்களுக்கான சிறப்பு ஊதியமாக ரூ.123.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கடந்த நவம்பா் மாதம் வரை 73.40 லட்சம் பயனாளிகளுக்கு வேலை வழங்கி வாரத்துக்கு ரூ.185 கோடி என்ற வீதத்தில் மொத்தம் ரூ.5,693 கோடி ஊதியமாகவும், ரூ.1,740 கோடி பொருள்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா காலத்தில் ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் அனைவருக்கும் தொடா்ச்சியாக வேலை வழங்கும் வகையில் கூடுதலாக 5 கோடி நாள்கள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7,662 கோடி மத்திய ,மாநில அரசுகளால் நிதி விடுவிக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1,750 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை நிதிபெறப்படும். 2020-21-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.9,200 கோடி பெறப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் கூடுதலாக 5.7 லட்சம் புதிய குடும்பங்களுக்கு வேலை அடையாள அட்டையும், 7.86 லட்சம் புதிய பெண் பயனாளிகளுக்கும், 7351 புதிய மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, பொதுப் பணித் துறை முதன்மைச் செயலா் கே.மணிவாசன், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com