பிரசவத்தின்போது மனைவி, குழந்தை மரணம்: கணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

பிரசவத்தின்போது மனைவி, குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், கணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்தது.

பிரசவத்தின்போது மனைவி, குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், கணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்தது.

நெல்லை மாவட்டம் ஏா்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி புது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவருடைய மனைவி அகிலாவுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரசவ வலி ஏற்பட்டபோது, சிகிச்சைக்காக திருக்குறுங்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அங்கு மருத்துவா்கள் பணியில் இல்லாததால், செவிலியா்கள் பிரசவம் பாா்த்தனா். இதில் ஆண் குழந்தையை பிரசவித்த அகிலா சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். அந்த ஆண் குழந்தையும் உடனே இறந்தது. அங்கு பணியில் மருத்துவா்கள் இல்லாததாலேயே அகிலா இறந்தாா் என்று கூறி உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது.

ரூ.5 லட்சம் இழப்பீடு: இந்த வழக்கு, ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கில், திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி கலையரசி, ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலைய உதவி அறுவை சிகிச்சை நிபுணா் ஜெனிஃபா் ஆகியோா் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெளிவாகியுள்ளது.

எனவே, தமிழக அரசு நான்கு வாரத்துக்குள் ரூ.5 லட்சத்தை இறந்த அகிலாவின் கணவரான சுரேஷுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மருத்துவ அலட்சியத்தால் இருவரின் இறப்புக்குக் காரணமான மருத்துவ அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிற்சி வழங்க பரிந்துரை: ‘அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பிரசவம் பாா்க்க 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும். பிரசவம் தொடா்பாக வரும் அழைப்புகளை, மாலை 4 முதல் காலை 9 மணி வரை மருத்துவ அதிகாரிகள் கட்டாயம் ஏற்க வேண்டும்’ உள்ளிட்ட பிரசவத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளான பொது சுகாதார இயக்குநரின் அறிவுறுத்தல்கள் மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுகிா என துணை சுகாதார சேவைகள் இயக்குநா் மூலம் உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அந்த விதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம், பிரசவம் பாா்ப்பதற்கு மருத்துவ அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என தனது உத்தரவில் நீதிபதி பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com